AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கொடியேற்றம் முதல் தேரோட்டம் வரை.. நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா!

நெல்லையப்பர் கோயிலின் 2025 ஆம் ஆண்டு ஆனித் திருவிழா ஜூன் 30 முதல் ஜூலை 9 வரை நடைபெறுகிறது. கொடியேற்றம், பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்மன் திருவீதி உலா, பக்தி இசை, பரதநாட்டியம், சொற்பொழிவுகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும். திருத்தேரோட்டம் ஜூலை 8 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடியேற்றம் முதல் தேரோட்டம் வரை.. நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா!
நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 28 Jun 2025 18:18 PM IST

திருநெல்வேலி என்றால் ஆன்மிக ரீதியாக நம் அனைவரின் மனதிற்கும் வரும் ஆலயம் என்றால் அது “காந்திமதி உடனுறை நெல்லையப்பர் திருக்கோயில்” தான். தென் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிவ ஆலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயில் புராண ரீதியாக பார்த்தால் மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தலமாக திகழ்கிறது. அடைமழையில் இருந்து நெல்லை வேலியிட்டு காத்ததால் இவர் நெல்லையப்பர் என அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. சுவாமியும், அம்பாளும் தனித்தனி சன்னதி கொண்டு வீற்றிருப்பது இக்கோயிலின் சிறப்பாகும். இந்த நெல்லையப்பர் கோயிலும் ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு விசேஷ நாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். ஆண்டு முழுவதும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து செல்லும் இந்த கோயிலில் ஆனித் திருவிழா என்பது மிகவும் விசேஷமானது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான திருவிழா தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.

நாள் 1 – ஜூன் 30

காலை 6 மணி முதல் 7.05 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். தொடர்ந்து காலையில் பூங்கோயில் சப்பரம் உட்பிரகாரத்தில் உலா வரும். தொடர்ந்து இரவு ஏழு மணிக்கு சுவாமி மற்றும் அம்மன் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதி உலா வருவார்கள். இந்த நாளில் மாலை 4 மணிக்கு மங்கல இசை நிகழ்ச்சியும்,4.30 மணிக்கு தேவார இசையும், மாலை 5 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு வாய்ப்பாட்டும், இரவு ஏழு மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசியின் பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும்.

நாள்  2 – ஜூலை 1

இரண்டாம் நாள் காலை 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சுவாமி மற்றும் அம்மன் திருவீதி உலா வருவார்கள். தொடர்ந்து மாலை 4 மணிக்கு பக்தி பாடல்கள் நிகழ்ச்சியும், 4.30 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவும், மாலை 5 மணிக்கு பரதநாட்டிய நிகழ்வும், மாலை 6:00 மணிக்கு பக்தி சொற்பொழிவும், 6:30 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் அவர்கள் தலைமையில் சிறப்பு சொல்லரங்கம் நடைபெறுகிறது. இதற்கிடையில் இரவு 7 மணிக்கு சுவாமி வெள்ளி கற்பகவிருட்சம் வாகனத்திலும், அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் திருவீதி உலா வருவார்கள்.

நாள்  3 – ஜூலை 2

மூன்றாம் நாளான புதன்கிழமை காலை 8 மணிக்கு சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் மற்றும் அம்மன் வெள்ளி கமல வாகனத்தில் திருவீதி உலா வருவார்கள். மாலையில் பரதநாட்டிய நிகழ்ச்சி, பக்தி சொல்லரங்கம், மற்றும் இரவு 7.30 மணிக்கு பிரபல பக்தி பாடகர் வீரமணி ராஜு தலைமையில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். இரவு 7 மணிக்கு சுவாமி பூத வாகனத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் வீதியுலா வருவார்கள்.

நாள்  4 – ஜூலை 3

நான்காம் திருநாள் காலையில் 8  மணிக்கு சுவாமி வெள்ளிகுதிரை வாகனத்திலும், அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும் திருவீதியுலா வருவார்கள். மீண்டும் இரவு 7 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனங்களில் சுவாமி அம்மன் 63 நாயன்மார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். இந்த நாளில் சிறப்பு நிகழ்ச்சிகளாக மாலை 4 மணி முதல் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டிய நிகழ்ச்சி, தேவார இன்னிசை மற்றும் துரை.பாலசுந்தரம் குழுவினரின் பக்த பிரகலாதா மேடை நாடகம் நடைபெறும்.

நாள்  5 – ஜூலை 4

ஐந்தாம் திருநாளில் காலை 8  மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி மற்றும் அம்மன் திருவீதியுலா வருவார்கள். இரவு 7 மணிக்கு இந்திர விமானத்தில் சுவாமி மற்றும் அம்மன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். இன்றைய நாளின் சிறப்பு நிகழ்ச்சிகளாக மாலை 4 மணி முதல் பரதநாட்டிய நிகழ்ச்சி, புத்தனேரி கோ.செல்லப்பா குழுவினரின் சொல் அரங்கம் மற்றும் இரவு 8 மணிக்கு சென்னை அருணா சகோதரிகளின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும்.

நாள்  6 – ஜூலை 5

ஆறாம் திருநாளான ஜூலை 5ஆம் தேதி காலை 8 மணிக்கு அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்தில் சுவாமியும் மற்றும் அன்ன வாகனத்தில் அம்மனும் திருவீதியுலா வருகை தருவார்கள். இரவு ஏழு மணிக்கு அதே வாகனத்தில் மீண்டும் சுவாமியும் அம்மனும் வீதியுலா வருவார்கள். இன்றைய நாளில் பரதநாட்டிய நிகழ்ச்சி, பக்தி இன்னிசை, திருமுறை இன்னிசை மற்றும் இரவு 8 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சியாக பாம்பே சாரதாவின் பக்தி இன்னிசை நடைபெறும்.

நாள்  7 – ஜூலை 6

ஏழாம் திருநாளான ஜூலை 6ஆம் தேதி காலை 8 மணிக்கு சுவாமி மற்றும் அம்மன் தவழ்ந்த திருக்கோளத்தில் பல்லக்கில் திருவீதியுலா வருவார்கள் இரவு ஏழு மணிக்கு சுவாமி வெள்ளை குதிரை வாகனத்திலும், அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும் அருள் பாலிப்பார்கள். அதே சமயம் நடராஜப் பெருமாள் சிவப்பு சாத்தி திருவீதி உலா வருவார். இரவு பத்து மணிக்கு நடராச பெருமாள் வெள்ளை சாத்தி உட்பிரகாரத்தில் வலம் வருவார். இன்றைய நாளின் சிறப்பு நிகழ்ச்சிகளாக பரதநாட்டிய நிகழ்ச்சி, திருமுறை விண்ணப்பம் மற்றும் இரவு 8 மணிக்கு ராஜேஷ் வைத்யாவின் வீணை இசை நடைபெறும்.

நாள் 8 – ஜூலை 7

ஜூலை ஏழாம் தேதி எட்டாம் திருநாளான திங்கட்கிழமை காலை 8 மணிக்கு நடராஜர் பச்சை சாத்தி வீதியுலா வருவார். மாலை 5 மணிக்கு தங்கச் சப்ரத்தில் கங்காள நாதர் காட்சி கொடுப்பார். அன்று இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதியுலா, சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்மன் தங்க கிளி வாகனத்திலும் திருவீதி உலா வருகை தரும். சிறப்பு நிகழ்ச்சிகளாக பரதநாட்டிய நிகழ்ச்சி, பக்தி சொற்பொழிவு, மற்றும் திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.

நாள்  9 – ஜூலை 8

ஒன்பதாம் நாள் திருவிழாவில் திருத்தேரோட்டம் நடைபெறும்.  அன்று காலை 8:30 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாக திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

நாள்  10 – ஜூலை 9

பத்தாம் நாள் நிகழ்ச்சியாக ஜூலை 9ஆம் தேதி புதன்கிழமை தேர் நிலையம் வந்த பிறகு சப்தவர்ண பல்லக்கில் சுவாமி மற்றும் அம்மன் திருவீதி உலா நடைபெறும். அன்று காலையில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெறும். இத்துடன் ஆனித்திருவிழா நிறைவடையும்.

Follow Us