AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி – திருவண்ணாமலை கோவிலில் லட்டு பிரசாதம் நிறுத்தம்

Gas Shortage Impact Temple : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிலிண்டர் தட்டுப்பாடு தற்போது கோவில்களிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளன. திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் லட்டு பிரசாதம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி – திருவண்ணாமலை கோவிலில் லட்டு பிரசாதம் நிறுத்தம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Mar 2026 16:37 PM IST

திருவண்ணாமலை, மார்ச் 21 : அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும்  போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு, தற்போது தமிழ்நாட்டில் ஹோட்டல்கள் மட்டுமல்லாமல் பல துறைகளை பாதித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, மாநிலம் முழுவதும் பல ஹோட்டல்கள் மற்றும் சிறிய உணவகங்களில் மெனுக்களை குறைத்து விற்பனை செய்து வருகின்றன. மேலும், சில உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறபபடுகிறது.  சிலிண்டர் தட்டுப்பாடு ஹோட்டல்கள் மட்டுமல்ல, கேட்டரிங் போன்ற தொழில்களையும் பாதித்துள்ளன. இதனால் திருமணங்கள் நடைபெறுவதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன.

இதையும் படிக்க : ரமலான் பண்டிகை… தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

திருவண்ணாமலையில் லட்டு பிரசாதம் நிறுத்தம்

இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை கிரிவல பாதையில் செய்லபட்டு வந்த சிறிய அளவிலான உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் வெளியிட்ட தகவலின்படி, இரண்டு நாட்களாக இலவச லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், எண்ணெயில் தயாரிக்கப்படும் முறுக்கு, எள்ளு வடை, அதிரசம், லட்டு போன்ற பொருட்களின் விற்பனையும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, பக்தர்களுக்கு ரூ.50 முதல் பிரசாதங்கள் விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளனன.  மேலும், ரூ.10க்கு விற்கப்படும் புளியோதரை மற்றும் சக்கரை பொங்கல் மட்டும் இதுவரை வழங்கப்பட்டு வந்த நிலையில், சிலிண்டர் விநியோகம் தடைபட்டுள்ளதால், அவற்றையும் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அண்ணாமலையார் கோவில்,  பஞ்சபூத தலங்களில் அக்னி தலம் என போற்றப்படும் முக்கிய தலமாகும். இங்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பௌர்ணமி போன்ற சிறப்பு நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபடுகின்றனர். இந்த சூழலில் பிரசாத விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பது பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : பறவை காய்ச்சல் பாதிப்பு.. பொதுமக்கள் அச்சப்படவேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..

வணிக சிலிண்டர்கள் கிடைக்காத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், சிலிண்டர் விநியோகம் சீரானதும் மீண்டும் பிரசாத விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த பிரச்னைக்கு மாற்று வழியாக, விறகு அடுப்பு மூலம் சமையல் செய்வதற்கான அனுமதி இந்து சமய அறநிலையத் துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைக்கும் பட்சத்தில் விறகு அடுப்பு பயன்படுத்தி பிரசாதம் தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில், சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கோயில் மட்டுமின்றி பொதுமக்களின் தினசரி வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை எப்போது சரியாகும் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

Follow Us