Naga Panchami: ஜூலை29ல் கொண்டாடப்படும் நாக பஞ்சமி.. வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?
2025-ம் ஆண்டு நாக பஞ்சமி ஜூலை 29 (செவ்வாய்) அன்று வருகிறது. இந்த நாளில் நாக தேவதையை வழிபடுவது நாக தோஷ நிவர்த்திக்கும் குடும்ப வளர்ச்சிக்கும் உதவும். வீட்டில் நாக சிலை/படம், மஞ்சள், குங்குமம், பூக்கள், பழங்கள், பால், கற்பூரம், பாக்கு, வெற்றிலை ஆகியவற்றை வைத்து வழிபடலாம்.

இந்த உலகத்தில் படைக்கப்பட்ட மனிதர்கள் தொடங்கி பல்வேறு வகையான உயிரினங்கள் வரை கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவையாக உள்ளது. அந்த வகையில் பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என சொல்வார்கள். நம்மில் பலரும் பாம்பை கண்டால் தெறித்து ஓடி விடுவோம். ஆனால் புராணங்களில் பாம்பு தெய்வத்தின் வாகனமாக கருதப்படுகிறது. நாகராஜர் என அழைக்கப்படும் அளவிற்கு பாம்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சிவனின் கழுத்தில் தொடங்கி அம்மனுக்கு குடையாக இருப்பது வரை பாம்பு பல்வேறு வகையான நிலைகளில் வழிபாடு செய்யப்படுகிறது. இப்படியான பாம்புகளுக்கு வழிபாடு நடத்தும் வகையில் ஒவ்வொரு கோயிலிலும் நாகர் சன்னதி கண்டிப்பாக இடம் பெறுகிறது. அதேசமயம் ஆடி மாதத்தில் அமாவாசை முடிந்து வரும் வளர்பிறை பஞ்சமி அன்று நாக பஞ்சமி தினமானது வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
2025 நாக பஞ்சமி எப்போது?
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நாகப்பஞ்சமி ஜூலை 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இந்த பஞ்சமி திதியானது ஜூலை 28ஆம் தேதி இரவு 11.24 மணிக்கு தொடங்கி, ஜூலை 30ஆம் தேதி அதிகாலை 12.46 மணிக்கு முடிவடைகிறது சூரிய உதயத்தை கணக்கில் கொள்ளும் போது 29ஆம் தேதி நாக பஞ்சமியாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வழிபடுவதற்கான சிறந்த நேரமாக காலை 5.41 மணி முதல் காலை 8.23 மணி வரை தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிபாடு செய்வது எப்படி?
ஆடி மாதத்தில் வரும் நாக பஞ்சமி தினத்தில் வீட்டில் நாக தேவதையை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் நாக தோஷம் நீங்குவதற்காகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காகவும் வழிபட வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆடிச் செவ்வாய்க்கிழமையில் நாக பஞ்சமி வருவதால் அன்றைய நாள் அம்பிகை வழிபாடுடன் சேர்த்து நாகர்களையும் வணங்குவது பல எதிர்பாராத சிறப்பு பலன்களை தரும் என நம்பப்படுகிறது.
Also Read: கடன் பிரச்னைகளை தீர்க்கும் ஆடி செவ்வாய் வழிபாடு.. எப்படி செய்ய வேண்டும்?
நீங்கள் வீட்டில் வழிபடுபவராக இருந்தால் நாக பஞ்சமியன்று நாகர் சிலைகள் அல்லது படங்களை வைத்துக் கொள்ளலாம். எதுவும் இல்லை என்றால் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் ஏதேனும் ஒரு தெய்வத்தின் படத்தில் நாகம் இருக்கும். அதனை வைத்துக் கொள்ளலாம். தொடர்ந்து பூஜைக்கான பொருட்களாக மஞ்சள், குங்குமம், அரிசி மாவு, பழங்கள், பூக்கள், எலுமிச்சை, பால், கற்பூரம், பாக்கு, வெற்றிலை ஆகியவற்றை வைக்க வேண்டும்.
முதலில் வீட்டை சுத்தம் செய்து பூஜை செய்வதற்கான இடத்தை தயார் செய்ய வேண்டும். பின்னர் நாகர் சிலைகளுக்கு மஞ்சள் பூசி குங்குமம் இட வேண்டும். ஒருவேளை புகைப்படமாக இருந்தால் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். தொடர்ந்து பூக்களை கொண்டு அதனை அலங்கரிக்க வேண்டும். அதன் பின்னர் வெற்றிலை, பாக்கு, பழம் ஆகியவையுடன் பால் அல்லது எலுமிச்சை போன்றவற்றை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டின் போது நாக பஞ்சமிக்கான மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்
Also Read:Spiritual: வெற்றிலையில் தீபம் ஏற்றினால் இவ்வளவு நன்மைகளா?
ஒருவேளை நீங்கள் இந்நாளில் விரதம் இருப்பதாக இருந்தால் இருவேளை சாப்பிடாமலும், முடியாதவர்கள் பால் அல்லது பழம் எடுத்துக்கொண்டு விரதத்தை கடைபிடிக்கலாம். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று நாகர் புற்று இருந்தால் அங்கு பால் ஊற்றி, பூ வைத்து வழிபட வேண்டும் சைவ சமயத்தில் இந்த நாள் நாகபஞ்சமி என அழைக்கப்படும் நிலையில் வைணவ சமயத்தில் இந்நாள் கருட பஞ்சமி என கூறப்படுகிறது இந்நாளில் செய்யும் வழிபாடுகள் மூலம், குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் செல்வ வளமும் அதிகரிக்கும் என்பதை நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை)