பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை அவசரமின்றி, புன்னகையோடு தயார் செய்வது எப்படி?
Smart Morning Routines: முந்தைய இரவிலேயே பள்ளி சீருடைகள், பைகள் மற்றும் சமையல் தேவைகளைத் திட்டமிட்டுத் தயார் செய்து வைப்பது காலை நேரப் பதற்றத்தைப் பாதியாகக் குறைக்கும். குழந்தைகள் எழுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே பெற்றோர்கள் எழுந்து தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வது வீட்டின் சூழலை அமைதியாக வைத்திருக்க உதவும்.
காலை அலாரம் அடித்த உடனே வீடே ஒரு போர்க்களமாக மாறிவிடுகிறதா? “சீக்கிரம் சாப்பிடு”, “வேன் வந்துடும், சீக்கிரம் ஷூ போடு” போன்ற அலறல் சத்தங்கள் இல்லாத வீடுகளைப் பார்ப்பது இன்று அரிதாகிவிட்டது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை வைத்திருக்கும் பெரும்பாலான பெற்றோர்களின் காலை பொழுது மிகுந்த மன அழுத்தத்துடனேயே தொடங்குகிறது. இந்த அவசரமும் பதற்றமும் பெற்றோர்களை மட்டுமின்றி, குழந்தைகளின் நாள் முழுவதையும் எதிர்மறையாகப் பாதிக்கிறது. ஆனால், ஒரு சில எளிய திட்டமிடல் மற்றும் பழக்கவழக்க மாற்றங்கள் மூலம் இந்த காலை நேரப் பதற்றத்தைத் தவிர்த்து, அமைதியான முறையில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியும் என்கிறார்கள் குடும்ப நல ஆலோசகர்கள்.
முந்தைய இரவு திட்டமிடலின் மந்திரம்
காலை நேரத்து அவசரத்தைக் குறைப்பதற்கான மிக முக்கியமான சாவி முந்தைய இரவிலேயே ஒளிந்திருக்கிறது. மறுநாள் காலையில் செய்ய வேண்டிய வேலைகளை இரவிலேயே திட்டமிட்டு முடிப்பது பாதி பாரத்தைக் குறைத்துவிடும். குழந்தைகளின் பள்ளி சீருடை, அடையாள அட்டை, ஷூ மற்றும் சாக்ஸ் போன்றவற்றை இரவிலேயே எடுத்துத் தயாராக வைக்க வேண்டும். அதேபோல், மறுநாள் காலை என்ன சமையல் செய்ய வேண்டும், மதிய உணவுக்கு என்ன கொடுத்து அனுப்ப வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து, காய்கறி நறுக்குவது போன்ற முதற்கட்ட வேலைகளை இரவிலேயே முடித்து வைப்பது காலை நேரத்துச் சமையல் அறையின் பதற்றத்தை முற்றிலும் போக்கும்.
அதிகாலை எழுவதே ஆரோக்கியமான தொடக்கம்
“சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுவது” என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல, அதுவே அமைதியான காலை பொழுதுக்கான அடித்தளம். குழந்தைகள் எழுவதற்கு குறைந்தது முப்பது நிமிடங்களுக்கு முன்பாகவே பெற்றோர்கள் எழுந்துவிடுவது நல்லது. நீங்கள் நிதானமாக உங்கள் காலை கடமைகளை முடித்துவிட்டு, சமையல் வேலைகளையும் ஓரளவிற்குத் தயார் செய்துவிட்டால், குழந்தைகளை எழுப்பும்போது உங்களால் பதற்றமின்றி நிதானமாகச் செயல்பட முடியும். குழந்தைகள் எழுவதற்குப் போதுமான கால அவகாசத்தைக் கொடுப்பதன் மூலம், அவர்கள் தூக்கக் கலக்கத்திலிருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்ப வழிவகுக்கும்.
குழந்தைகளைப் பொறுப்பாக்கும் காலைப் பழக்கம்
அனைத்து வேலைகளையும் பெற்றோர்களே தங்கள் தலைமேல் போட்டுக்கொள்ளக் கூடாது. குழந்தைகளுக்கு வயதுக்கேற்ற சிறு சிறு பொறுப்புகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும். படுக்கையைச் சுருட்டி வைப்பது, பல் துலக்குவது, குளித்த பின் ஆடைகளைத் தாங்களாகவே அணிந்துகொள்வது, பள்ளிப் பையைத் தயார் செய்வது போன்ற வேலைகளை அவர்களே செய்யப் பழக்க வேண்டும். தொடக்கத்தில் இதற்குச் சற்று கூடுதல் நேரம் எடுத்தாலும், நாளடைவில் இது அவர்களின் சுய ஒழுக்கத்தை வளர்ப்பதோடு, பெற்றோர்களின் வேலைச் சுமையையும் கணிசமாகக் குறைக்கும்.
நேர்மறையான அணுகுமுறையும் பாராட்டுதல்களும்
காலை நேரத்தில் குழந்தைகளை அதட்டுவதோ அல்லது மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதோ அவர்களின் மனநிலையைக் கெடுத்துவிடும். அதற்குப் பதிலாக, “இன்னைக்கு நீங்க ரொம்ப சீக்கிரம் ரெடி ஆயிட்டீங்க, வெரி குட்!” என்பது போன்ற நேர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களை ஊக்குவிக்க வேண்டும். காலை உணவை அவர்கள் ரசித்துச் சாப்பிடக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும். பதற்றமில்லாத, அன்பான மற்றும் மகிழ்ச்சியான ஒரு காலைத் தொடக்கம், குழந்தைகள் பள்ளிக்கு ஆர்வத்துடனும் புன்னகையுடனும் செல்ல வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.