வாக்கிங் போக சிறந்த நேரம் எது? காலையா? மாலையா?
Morning or Evening Walk : தவறான உணவுப் பழக்கத்தால் மக்கள் சமீப காலமாக மக்கள் உடல் எடை பிரச்னையால் அவதிப்படுகின்றனர். வாக்கிங் போவது உடல் எடை குறைப்பதற்கு உதவும். ஆனால் காலையில் வாங்கிங் போவது சிறந்ததா? அல்லது மாலையில் வாக்கிங் போவது சிறந்ததா என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

வாழ்க்கை முறையின் மாற்றங்கள் (Lifestyle), தவறான உணவு பழக்க வழக்கங்களால் மக்கள் உடல் நலக் குறைவால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கடந்த சில வருடங்களாக உடல் பருமனால் (Obesity) அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் நடைபயிற்சி (Walking) உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அதிக முயற்சி இல்லாமல் எடை குறைக்க விரும்பும் எவருக்கும் நடைபயிற்சி ஒரு சிறந்த பயிற்சியாகும். சரியான முறையில் நடைபயிற்சி மேற்கொண்டால் நிச்சயமாக எடையைக் குறைக்கலாம். நடைபயிற்சி செரிமானத்தை மேம்படுத்தவும், தசைகளை வலுப்படுத்தவும், இதயத்தை வலுப்படுத்தவும், மனச்சோர்வு மற்றும் பதட்டத்தைக் குறைக்கவும் உதவும்.
பெரும்பாலான மக்கள் தங்கள் வேலை மற்றும் பரபரப்பான வாழ்க்கையைப் பொறுத்து அதிகாலை அல்லது மாலையில் நடக்கத் தேர்வு செய்கிறார்கள். இந்த நிலையில் உடல் எடை குறைப்பதற்கு காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது சிறந்ததா அல்லது மாலையில் நடைபயிற்சி மேற்கொள்வது சிறந்ததா என இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
காலை நடைப்பயிற்சி
காலையில் நடப்பது, குறிப்பாக வெறும் வயிற்றில் நடப்பது, உடல் எடை குறைப்பதற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. நீங்கள் காலை உணவுக்கு முன் நடக்கும்போது, உங்கள் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவுகள் குறைவாக இருப்பதால், உங்கள் உடல் சேமித்து வைக்கப்பட்ட கொழுப்பை அதன் முக்கிய ஆற்றலாகப் பயன்படுத்துகிறது. இது உணவுக்குப் பிறகு நடப்பதை விட அதிக கொழுப்பை எரிக்க உதவுகிறது. காலை நடைப்பயிற்சி உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, அதாவது உங்கள் உடல் நாள் முழுவதும் அதிக அளவு கலோரிகளை எரிக்கிறது.




காலையில் உடற்பயிற்சி செய்வது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதோடு, தொப்பை கொழுப்போடு தொடர்புடைய கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கும். நடைப்பயிற்சியுடன் உங்கள் நாளைத் தொடங்குவது மனநிலையையும் ஆற்றலையும் மேம்படுத்தி, நாள் முழுவதும் நேர்மறையாக இருக்க உதவுகிறது.
மாலை நடைப்பயிற்சி
மாலை நேர நடைப்பயிற்சி அவற்றுக்கென தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளது. ஒரு நாள் சாப்பிட்ட பிறகு, மாலையில் நடப்பது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த அல்லது தடுக்க விரும்புவோருக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். இரவு உணவிற்குப் பிறகு நடப்பது அஜீரண கோளாறை தடுக்கும். மேலும் இரவு நேர பசியைக் குறைக்கும். இது எடை இழப்புக்கு நல்லது.
மாலை நேரங்களில் நிலவும் குளிரான வெப்பநிலையும் அமைதியான சூழ்நிலையும் பலருக்கு நடைப்பயணத்தை மிகவும் சுவாரஸ்யமாக்குகின்றன. இதனால் மன அழுத்தத்தைக் குறைத்து, அன்றைய மன அழுத்தங்களிலிருந்து விடுபட இது ஒரு சிறந்த வழியாகும். மன அழுத்தத்தைக் குறைப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இந்த நடைப்பயிற்சிகள் காலை நடைப்பயிற்சியைப் போல விரைவாக கொழுப்பை குறைக்காவிட்டாலும், அவை கலோரிகளை எரித்து எடை குறைக்க உதவுகின்றன. இது தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்துகின்றன.