Suresh Gopi: வருமானம் குறையுது.. அமைச்சர் பதவி வேண்டாம்.. சுரேஷ்கோபி முடிவு!
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தனது தனிப்பட்ட வருமானம் குறைந்ததால் அமைச்சர் பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார். தனக்கு பதிலாக மூத்த பாஜக தலைவர் சதானந்தன் மாஸ்டரை பரிந்துரைத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முழுநேர நடிகனாக திரும்பும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

சுரேஷ் கோபி
கேரளா, அக்டோபர் 13: தனிப்பட்ட வருமானம் குறைந்து வருவதை காரணம் காட்டி, மத்திய அமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி தனது பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்துள்ள சம்பவம் அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய இணை அமைச்சராக உள்ள சுரேஷ் கோபி தன்னை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்ததோடு, பாஜகவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சி சதானந்தன் மாஸ்டர் பெயரை தனக்கு பதிலாக மத்திய அமைச்சரவையில் நியமிக்க பரிந்துரை செய்துள்ளார்.
சதானந்தன் கலந்து கொண்ட ஒரு விழாவில் பாஜக தொண்டர்களிடம் உரையாற்றிய சுரேஷ் கோபி, இதனை தெரிவித்துள்ளார். சதானந்தன் போன்ற ஒரு மூத்த தலைவரின் மாநிலங்களவை நியமனம் வடக்கு கண்ணூர் மாவட்ட அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கிறது என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஐயப்பன் மாநாட்டிற்கு அழைத்த கேரள அரசு.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. பாஜக விமர்சனம்!
மேலும் என்னை நீக்கிய பிறகு சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சராக்க வேண்டும் என்று நான் இங்கே மனதாரக் கூறுகிறேன். இது கேரள அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக மாறும் என்று நான் நம்புகிறேன். அதுமட்டுமல்லாமல் சதானந்தனின் எம்.பி. அலுவலகம் விரைவில் அமைச்சர் அலுவலகமாக மேம்படுத்தப்பட வேண்டும் என்று தான் வேண்டிக் கொள்வதாகவும் கூறினார்.
சுரேஷ் கோபி தற்போது மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சராகப் பணியாற்றி வருகிறார். மலையாள சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக விளங்கிய அவர், அரசியல்வாதியாகவும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். 2016 ஆம் ஆண்டு அக்டோபரில் பாஜகவில் சேர்ந்த அவர், அந்த மாநிலத்தின் இளைய பாஜக உறுப்பினர்களில் ஒருவர் எனவும் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது கேரள மாநிலத்தில் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் சுரேஷ் கோபி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனை கௌரவிக்கும் விதமாக அவருக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே எனது திரைப்பட வாழ்க்கையை விட்டுவிட்டு அமைச்சராக வேண்டும் என்று நான் ஒருபோதும் விரும்பியதில்லை என சுரேஷ் கோபி வெளிப்படையாகவே கருத்து தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: சுரேஷ் கோபி படத்தின் வெளியீட்டில் சிக்கல்; கோவத்தில் மலையாள திரையுலகம்!
தற்போது சமீபத்திய காலங்களில் எனது வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளது. மீண்டும் முழுநேர நடிகனாக மாற அவர் முடிவு செய்துள்ளது அரசியல் மற்றும் சினிமாவுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும் அவர் பரிந்துரைத்துள்ள சதானந்தன் மாஸ்டர் முன்னாள் பள்ளி ஆசிரியரராவார். அவர் பாஜக கட்சியின் மூத்த தலைவராகவும், அதன் மாநிலப் பிரிவின் துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். 1994 ஆம் ஆண்டு சிபிஐ(எம்) தொண்டர்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலின் போது தனது இரண்டு கால்களையும் இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.