Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நெருங்கும் தேர்தல்.. பாஜகவின் மாநில மாநாடுகள்.. பிரதமர் மோடி பங்கெற்க திட்டம்..

BJP State Conference: பாஜக வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பிரம்மாண்டமான மாநாடுகள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக, கோவை, தஞ்சாவூர், சென்னை, மதுரை ஆகிய மாவட்டங்களில் இந்த மாநாடுகள் நடைபெறவுள்ளன. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

நெருங்கும் தேர்தல்.. பாஜகவின் மாநில மாநாடுகள்.. பிரதமர் மோடி பங்கெற்க திட்டம்..
பிரதமர் மோடி
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Sep 2025 16:52 PM IST

பாஜக மாநாடு, செப்டம்பர் 7, 2025: தமிழகத்தில் வரும் 2025 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பாஜக தரப்பில் நான்கு மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த மாநாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஏழு மாதங்கள் உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025 ஏப்ரல் மாதம் உள்துறை அமைச்சர் தமிழகத்திற்கு வருகை தந்தபோது, அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம், பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

பாஜகவின் தேர்தல் பிளான்:

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில், பாஜக நான்கு இடங்களை கைப்பற்றியது. இந்த முறை அதிக இடங்களைப் பெற வேண்டும் என்பதற்காக, பாஜக தரப்பில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, பூத் ஏஜென்ட்களை வலுப்படுத்துவது, நிலவரம் யாருக்கு சாதகமாக உள்ளது, எந்தெந்த தொகுதிகளில் பாஜக வலுவாக உள்ளது, எந்தெந்த தொகுதிகளில் இன்னும் பணிகள் தேவைப்படுகிறது என்பன குறித்து தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தினசரி மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

மேலும் படிக்க: தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் சூறாவளி சுற்றுப்பயணம்.. ஒரே நாளில் 3 மாவட்டங்களில் பரப்புரை..

4 மாவட்டங்களில் பிரம்மாண்ட மாநாடு:

மேலும், 2025 ஆகஸ்ட் மாதம் நெல்லையில் பிரம்மாண்டமாக பூத் ஏஜென்ட்களின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அடுத்தடுத்து தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பிரம்மாண்டமான மாநாடுகள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக, கோவை, தஞ்சாவூர், சென்னை, மதுரை ஆகிய மாவட்டங்களில் இந்த மாநாடுகள் நடைபெறவுள்ளன.

மேலும் படிக்க: அதிமுகவில் சலசலப்பு.. 5ம் கட்ட சுற்றுப் பயணத்திற்கு தயாரான இபிஎஸ்.. விவரம் வெளியீடு

பிரதமர் மோடி கலந்துக்கொள்ள வாய்ப்பு:

இதில் பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்கச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி பாஜக தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், கூட்டணி கட்சியான அதிமுகவிலும் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார். நான்கு கட்டப் பிரச்சாரங்கள் நடத்தப்பட்ட நிலையில், ஐந்தாவது கட்டப் பிரச்சார பயணம் குறித்தும் அவர் தற்போது அறிவித்துள்ளார்.