தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் சூறாவளி சுற்றுப்பயணம்.. ஒரே நாளில் 3 மாவட்டங்களில் பரப்புரை..
TVK Vijay Campaign: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் செப்டம்பர் 13, 2025 அன்று பிரச்சாரப் பயணம் மேற்கொள்கிறார். காலை 10:30 மணிக்கு டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் பரப்புரை தொடங்கி, பின்னர் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொள்வார் என கூறப்பட்டுள்ளது.

த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை, செப்டம்பர் 7, 2025: 2024 ஆம் ஆண்டு விஜயால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகம் கட்சி, தனது முதல் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இதில், தமிழக வெற்றிக்கழகம் யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், தமிழக வெற்றிக்கழகத்தைப் பொறுத்தவரையில் தலைவர் விஜய், “அரசியல் எதிரி பாஜக, கொள்கை எதிரி திமுக” என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இதன் காரணமாக, திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், அதிமுகவின் உட்கட்சி விவகாரம் தற்போது வெளிப்படையாகி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைந்து தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்கிற யூகங்கள் வெளிவந்துள்ளன.
த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை:
இத்தகைய சூழலில், வரும் செப்டம்பர் 13, 2025 அன்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணம் தொடங்குகிறார். முதலில் திருச்சி மாவட்டத்திற்கு சென்று அங்கு பல்வேறு இடங்களில் பரப்புரை செய்ய இருக்கிறார். திருச்சியில் டோல்கேட், மரக்கடை, பாலக்கரை ரவுண்டானா, தலைமை அஞ்சலகம் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் அவர் பரப்புரை மேற்கொள்வார்.
மேலும் படிக்க: விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னை.. அதிமுக மாஜி எம்பி சத்தியபாமாவின் கட்சி பொறுப்பு பறிப்பு
முன்னதாக, திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் தலைவர் விஜய் உரையாற்றுவதற்காக, அத்தாட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் காவல்துறையிடம் அனுமதி கோரி மனு அளித்தார். ஆனால் மக்கள் அதிகம் கூடும் இடம் என்பதன் காரணமாக, அந்த இடத்தில் விஜய் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மரக்கடை அல்லது பாலக்கரை ரவுண்டானா போன்ற மாற்று இடங்களைத் தேர்வு செய்யுமாறு காவல்துறை பரிந்துரைத்தது.
இந்த சூழலில், சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பதிலாக மரக்கடை பகுதியில் தலைவர் விஜய் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கட்சி நிர்வாகிகள் அதற்கான வேலைகளை செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: ’செங்கோட்டையனுக்கு தான் சப்போர்ட்.. விரைவில் சந்திப்பேன்’ உறுதியாக சொன்ன ஓபிஎஸ்!
ஒரே நாளில் மூன்று மாவட்டங்களில் பரப்புரை:
மேலும், தலைவர் விஜய் ஒரே நாளில் மூன்று மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். செப்டம்பர் 13, 2025 அன்று காலை 10:30 மணிக்கு டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் பரப்புரை தொடங்கி, பின்னர் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொள்வார் என கூறப்பட்டுள்ளது.
விஜய் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களில் மக்கள் அதிகம் கூட வாய்ப்பு உள்ளதால், அப்பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினரும் ஏராளமாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.