Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

’செங்கோட்டையனுக்கு தான் சப்போர்ட்.. விரைவில் சந்திப்பேன்’ உறுதியாக சொன்ன ஓபிஎஸ்!

AIADMK Internal Issues : அதிமுகவில் உட்கட்சி பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கிடையில், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் முயற்சிக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், அவரை விரைவில் சந்திப்பேன் என்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உறுதிபடத் தெரிவித்து உள்ளார்.

’செங்கோட்டையனுக்கு தான் சப்போர்ட்.. விரைவில் சந்திப்பேன்’ உறுதியாக சொன்ன ஓபிஎஸ்!
செங்கோட்டையன் - ஓ.பன்னீர்செல்வம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 07 Sep 2025 11:46 AM IST

சென்னை, செப்டம்பர் 07 : அதிமுக (AIADMK) முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை  (Sengottaiyan) விரைவில் கண்டிப்பாக சந்திப்பேன் என்று முன்னாள் முதல்வல் ஓ.பன்னீர்செல்வம் ( O Panneerselvam) தெரிவித்துள்ளார். மேலும், தனது ஆதரவு செங்கோட்டையனுக்கு எப்போது இருக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். அதிமுகவில் உட்கட்சி பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இதனால், எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் செங்கோட்டையன் தவிர்த்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தார்.

அதாவது, மறப்போம், மன்னிப்போம் என்ற அடிப்படையில் அதிமுகவில் இருந்து பிரிந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்.  அவ்வாறு நடந்தால் தேர்தல் களத்தில் வெற்ற பெற முடியும் என்றார். இந்த நடவடிக்கைக்காக 10 நாட்கள் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார். 10 நாட்களில் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், நாங்கள் இந்த பணிகளை மேற்கொள்வோம் என தெரிவித்தார். ஆனால், இதற்கு பழனிசாமி எந்த பதிலும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

Also Read : செங்கோட்டையனின் பதவி பறிப்பு சிறுபிள்ளைத்தனமான செயல் – சசிகலா அறிக்கை..

’செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன்’

இதனை அடுத்து, செங்கோட்டையனின் நிபந்தனையை ஏற்க மறுத்து, செங்கோட்டையனை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்தார். அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் அமைப்பு செயலார் பொறுப்புகளில் இருந்து அவரை நீக்கினார். செங்கோட்டையனை தெடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சிலரின் பொறுப்புகளை அவர் நீக்கினார். மேலும், 1000க்கும் மேற்பட்ட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தனது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

செங்கோட்டையனின் முயற்சிக்கு சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், அதிமுகவில் உள்ள சீனியர் தலைவர்களும் ஆதரவாக உள்ளனர். இந்த நிலையில், தேனி பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

Also Read : கொங்குவின் முக்கிய முகம்… ரூட்டை மாற்றுவாரா செங்கோட்டையன்? 2026 தேர்தலில் அதிமுகவுக்கு சிக்கல்

அப்போது பேசிய அவர், ” அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் முயற்சிக்கு தனது முழு ஆதரவை தெரிவிக்கிறேன். அவர் எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் எனது ஆதரவு இருக்கும். 10 நாட்கள் அவகாசம் கொடுத்து இருக்கிறார். 10 நாட்களுக்கு பிறகு, அனைவரையும் அழைத்து பேசுவோம். செங்கோட்டையனை நான் விரைவில் உறுதியாக சந்திப்பேன்” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுக்கு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். எனவே, அவர் சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை  கட்சியில் இணைப்பாரா இல்லையா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அப்படி இணைக்காத பட்சத்தில், செங்கோட்டையன் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.