ஐயப்பன் மாநாட்டிற்கு அழைத்த கேரள அரசு.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. பாஜக விமர்சனம்!
CM MK Stalin : கேரளாவில் 2025 செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ள ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் மறுத்த நிலையில், அம்மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறினார். தனக்கு அன்றைய நாளில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி உள்ளதால் பங்கேற்க முடியவில்லை எனவும் விளக்கம் அளித்தார்.

சென்னை, ஆகஸ்ட் 26 : கேரளாவில் 2025 செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெறும் ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள கேரள அரசு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அந்த அழைப்பை முதல்வர் ஸ்டாலின் மறுத்துள்ளார். அதோடு, அம்மாநாட்டில் அமைச்சர் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்வார் எனவும் அவர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள மறுத்த, முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜகவினர் கண்டம் தெரிவித்து வருகின்றனர். கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்த கோயிலை திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வகித்து வருகிறது.
திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் ஆண்டுதோறும் ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொள்வார்கள். இந்த மாநாட்டை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கும் நிலையில், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட முதல்வர்களும் கலந்து கொள்வார்கள். அந்த வகையில், சமீபத்தில் சென்னை வந்த கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சர் வி.என்.வாசன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஐயப்ப பக்தர்கள் மாநாட்டிற்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
கேரள முதல்வரின் அழைப்பை மறுத்த ஸ்டாலின்
இந்த நிலையில், ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் தான் கலந்து கொள்ளவில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2025 செப்டம்பர் 20ஆம் தேதி லோக அய்யப்ப சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேரள தேவசம்போர்டு சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டது.
அன்றைய நாளில் முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக, திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழாவில் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளது. தமிழக அரசு சார்பாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்வார்கள்” என தெரிவித்தார்.
பாஜக விமர்சனம்
VIDEO | Coimbatore: BJP leader Tamilisai Soundararajan slams Kerala CM Pinarayi Vijayan for inviting Tamil Nadu CM MK Stalin to the Ayyappa conference, accusing both leaders of ‘trivialising’ Hindu sentiments.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/itUTVDiBty
— Press Trust of India (@PTI_News) August 25, 2025
இதற்கிடையில், முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். கேரள பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், “பல ஆண்டுகளாக பினராயி விஜயன் சபரிமலை மரபுகளை அவமதித்து, பக்தர்களைக் குறிவைத்து, அவர்களில் பலரை சிறையில் அடைத்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் இந்துக்களையும் இந்து நம்பிக்கையையும் விமர்சித்து வருகின்றனர். இதன்பிறகு, தேர்தலுக்கு முன்பு ஐயப்பனுக்கு பக்தி காட்ட முயற்சிக்கிறார்கள். இந்திய கூட்டணிக் கட்சிகள் சபரிமலை ஐயப்ப மாநாட்டில் கலந்து கொள்து உண்மைக்கு புறப்பானது” என கூறினார். மேலும், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் விமர்சித்துள்ளனர்.