மும்பையில் 17 குழந்தைகளை கடத்திய நபர் – என்கவுண்டர் செய்த போலீஸ் – பரபரப்பு சம்பவம்
Mumbai hostage crisis ends: மும்பையில் தன்னை திரைப்பட இயக்குநர் என்ற கூறிக்கொண்ட நபர், ஆடிசனுக்காக வந்த 17 குழந்தைகளை கடத்தி வைத்து மிரட்டியதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் குழந்தைகளை மீட்ட நிலையில், கடத்திய நபரை என்கவுண்டர் செய்தனர்
மும்பையில் (Mumbai) அக்டோபர் 30, 2025 அன்று காலை அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றது. மும்பையில் பவாய் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் தன்னை திரைப்பட இயக்குநர் என கூறிக்கொண்ட ரோஹித் ஆர்யா என்ற நபர் 17 குழந்தைகள் உட்பட 19 பேரை பிணையாக பிடித்து வைத்திருந்தது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தகவல் அறிந்து அந்த பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு குழந்தைகளை (Children) பத்திரமாக மீட்டனர். இந்த நிலையில் குழந்தைகளை கடத்திய ரோஹித் ஆர்யாவை பிடிக்க முயன்றபோது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆடிஷனுக்காக வந்த குழந்தைகள் சிக்கியது எப்படி?
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பவாய் பகுதியில் உள்ள ஆர்.ஏ. ஸ்டூடியோவில், சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் சிலர் நடிப்பு தேர்வுக்காக வந்திருந்தனர்.
அப்போது அங்கு திடீரென வந்த ரோஹித் ஆர்யா என்பவர் தன்னை ஒரு திரைப்பட இயக்குநர் என்று கூறியிருக்கிறார். பின்னர் அவர் குழந்தைகள் இருந்த அறையின் கதவை பூட்டி, அனைவரையும் உள்ளே அடைத்து வைத்தார். அங்கே 17 குழந்தைகள் மற்றும் 2 பெரியவர்கள் உட்பட 19 பேர் அந்த அறையில் சிக்கினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க : டெல்லியில் சொதப்பிய செயற்கை மழை கான்செப்ட்.. தோல்விக்கு காரணம் சொன்ன ஐஐடி!




வீடியோ மூலம் மிரட்டல்
இந்த நிலையில், ரோஹித் ஆர்யா சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், எனக்கு சிலரிடம் பேச வேண்டும், சில கேள்விகளுக்கு பதில் வேண்டும். அது கிடைக்காவிட்டால், இந்த ஸ்டூடியோவையே தீ வைத்து எரித்துவிடுவேன் என்று கூறி மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து போலீசார் அந்த ஸ்டுடியோவை முற்றுகையிட்டு ரோஹித்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மும்பை காவல்துறையின் ஸ்வாட் அணி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு இணைந்து உடனடியாக மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியது. சில மணி நேரத்திலேயே 17 குழந்தைகளும், மற்ற இரு பெரியவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பாக உள்ளனர் எனவும், யாருக்கும் காயமில்லை என்று காவல்துறை இணை ஆணையர் சத்ய நாராயணன் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.
இதையும் படிக்க : டெல்லி விமான நிலையத்தில் தீ பிடித்து எரிந்த பேருந்து.. கிளம்பிய கரும்புகை! போராடி தீயை அணைந்த ஊழியர்கள்..!
துப்பாக்கிச்சூட்டில் ரோஹித் ஆர்யா பலி
மீட்பு நடவடிக்கையின்போது, ரோஹித் ஆர்யா திடீரென தாக்குதல் நடத்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவரை தடுக்க காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் ரோகித் படுகாயமடைந்து உயிரிழந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரோஹித் ஆர்யாவின் பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர்.