‘எனது எதிர்கால இலக்கு இதுதான்’ – என்டிஏ தலைவர்களின் பாராட்டு விழா – பிரதமர் மோடி பகிர்ந்த முக்கிய தகவல்
PM Modi : தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. நாட்டு மக்களே என் கடவுள். வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளை நான் கண்டுள்ளேன். இவ்வளவு நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றது எனது நல்வாய்ப்பு என்றார்.
நாட்டின் பிரதமராக மிக நீண்ட காலம் பணியாற்றியவர் என்ற புதிய சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளார். இதன் மூலம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முந்தைய சாதனையை அவர் முறியடித்துள்ளார். என்டிஏ தலைவர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இது தனது வாழ்க்கையில் உண்மையிலேயே ஒரு அற்புதமான தருணம் என்று குறிப்பிட்டார். இவ்வளவு நீண்ட காலம் நாட்டின் பிரதமராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுவதாகக் கூறிய அவர், என்டிஏ கூட்டணித் தலைவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, அதிகாரத்தை ஒரு சேவையாகவே கருதுவதாக தெரிவித்தார். மேலும், பேசிய அவர், நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் ஒரு நிலையான அரசாங்கத்தை விரும்புவதாகக் குறிப்பிட்டார். என்டிஏ ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டின் மீது பொதுமக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். தனது அரசு செயல்படுத்திய திட்டங்களால் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் குறித்துப் பெருமிதம் தெரிவித்த அவர், நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு நாடு பல சிக்கல்களை எதிர்கொண்டதை நினைவுகூர்ந்த அவர், அதன்பிறகு நாட்டின் சூழலில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சுட்டிக்காட்டினார்.
இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இன்னும் கடுமையாக உழைப்போம் என்று பிரதமர் தெரிவித்தார். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் இந்தியா உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், தங்கள் கொள்கைகள் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவே அமைந்துள்ளன என்பதை வலியுறுத்தினார். “நாங்கள் வெறும் புள்ளிவிவரங்களை மட்டும் முன்வைக்கவில்லை. நடைமுறையில் முடிவுகளை நிரூபித்துக் காட்டுகிறோம்,” என்று கூறிய அவர், நிலையான அரசால் மட்டுமே இத்தகைய வளர்ச்சியைச் சாத்தியமாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் குறித்த விமர்சனம்
பிரதமராகத் தான் பதவியேற்றபோது எளிய மக்கள் அடைந்த மகிழ்ச்சியை மோடி நினைவுகூர்ந்தார். காங்கிரஸ் கட்சி நம்பிக்கைத் துரோகம் இழைத்ததாக விமர்சித்த அவர், கடந்த 12 ஆண்டுகளாக நாடு காங்கிரஸ் எனும் தீமையிலிருந்து விடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் தோல்விகளைத் தாங்கள் சரிசெய்து வருவதாகக் கூறிய அவர், உண்மையான வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியதற்காக அடல் பிஹாரி வாஜ்பாயைப் பாராட்டினார். முந்தைய காங்கிரஸ் அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல்களில் சிக்கியிருந்த நிலையில், தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஊழலற்றதாகத் திகழ்வதை மோடி சுட்டிக்காட்டினார். முன்பு பல தசாப்தங்கள் தேவைப்பட்ட வளர்ச்சிப் பணிகள், இப்போது சில மாதங்களிலேயே சாதிக்கப்படுவதையும் அவர் குறிப்பிட்டார்.
கட்சியை விட நாட்டு மக்களே தனக்கு மிக முக்கியமானவர்கள் என்று வலியுறுத்திய மோடி, தாங்கள் முதலில் தேசம் என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படுவதாகக் கூறினார். நாட்டின் எதிர்காலத்திற்காகக் கடுமையான முடிவுகளை எடுக்கத் தயங்க மாட்டோம் என்பதை 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததன் மூலம் நிரூபித்ததாக அவர் சுட்டிக்காட்டினார். காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதையும், நாடு முழுவதும் மாவோயிச நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். மேலும், முத்தலாக் முறையை ஒழிக்கும் சட்டம் இயற்றப்பட்டதையும், பெண்களுக்குச் சட்டரீதியான இடஒதுக்கீடு வழங்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். 2047 ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது தனது இலக்கு என்றார்.
எதிர்கால இலக்குகள்
உலகம் முழுவதும் இப்போது இந்தியாவை உற்றுநோக்குவதாகக் குறிப்பிட்ட அவர், 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை எட்டும் இலக்கை அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அணுசக்தி உற்பத்தியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், உற்பத்தித் துறைக்கு முன்னுரிமை அளித்தால் வளர்ச்சி மேலும் வேகமெடுக்கும் என்றும் கூறினார். வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கப்பல்கள் கட்டப்படுவதன் மூலம் ‘மேக் இன் இந்தியா’ (Make in India) தொலைநோக்குப் பார்வை நனவாகி வருவதைக் குறிப்பிட்டார். தற்போதைய காலம் ‘தரவு யுகம்’ (Data Age) என்பதால், தரவு மையங்களுக்கான உலகின் மிகப்பெரிய மையமாக இந்தியா மாறத் தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.