டெல்லியில் இனி எலக்ட்ரிக் ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி?.. புதிய எரிபொருள் கட்டுப்பாடுகளும் அமல்!!
இதனைக் கண்காணிப்பதற்காகப் பெட்ரோல் பங்குகளில் தானியங்கி எண் பலகை அங்கீகார கேமராக்கள் மற்றும் இதர நவீனத் தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்புகளை ஒருங்கிணைக்க டெல்லி மற்றும் பிற மாநில அரசுகளுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் சான்றிதழ் இல்லாத வாகனங்கள் உடனடியாகக் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எரிபொருள் மறுக்கப்படும்.
தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுப்படும் நோக்கில், தேசியத் தலைநகர் வலயத்திற்கான காற்றுத் தர மேலாண்மை ஆணையம் வரலாற்றுச் சிறப்புமிக்க இரு முக்கிய அதிரடி முடிவுகளை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, டெல்லி-NCR பகுதிகளில் இனி எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்கள் (L5 வகை ஆட்டோக்கள்) மட்டுமே படிப்படியாகப் பதிவு செய்ய அனுமதிக்கப்படும். அதேபோல, மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUCC) இல்லாத வாகனங்களுக்குப் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எந்தவொரு எரிபொருளும் வழங்கக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: எரிபொருள் தட்டுப்பாடு.. வாரத்தில் 2 நாட்கள் ஆன்லைனில் விசாரணை.. உச்ச நீதிமன்றம் அதிரடி!
எலக்ட்ரிக் ஆட்டோக்கள் மட்டுமே அனுமதி:
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுத் தரத்தை மேம்படுத்துவதற்காக, எலக்ட்ரிக் ஆட்டோக்களை (L5 வகை 3-சக்கர வாகனங்கள்) மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாய விதிமுறை படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய விதிமுறை டெல்லியில் வரும் ஜனவரி 1, 2027 முதல் முதலில் அமலுக்கு வருகிறது. அதிக வாகன நெரிசல் உள்ள NCR மாவட்டங்களான குருகிராம், ஃபரிதாபாத், சோனிபட், காசியாபாத் மற்றும் கௌதம் புத் நகர் (நொய்டா) ஆகிய பகுதிகளில் ஜனவரி 1, 2028 முதல் இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்படும்.
எஞ்சிய அனைத்து தேசியத் தலைநகர் வலய (NCR) மாவட்டங்களிலும் ஜனவரி 1, 2029 முதல் இந்த எலக்ட்ரிக் ஆட்டோக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் விதிமுறை முழுமையாக அமலுக்கு வரும். இதன் மூலம், சி.என்.ஜி (CNG) மற்றும் பிற வழக்கமான எரிபொருட்களில் இயங்கும் பழைய ஆட்டோக்கள் அனைத்தும் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து முற்றிலும் படிப்படியாக அகற்றப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
PUCC சான்றிதழ் கட்டாயம்:
ஆணையம் எடுத்துள்ள மற்றொரு மிக முக்கியமான முடிவு, செல்லுபடியாகும் மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாத வாகனங்கள் தொடர்பானது ஆகும். வரும் அக்டோபர் 1, 2026 முதல், தேசியத் தலைநகர் வலயம் (NCR) முழுவதிலும் உள்ள எந்தவொரு எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் , செல்லுபடியாகும் PUCC சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்குப் பெட்ரோல், டீசல் அல்லது சிஎன்ஜி போன்ற எந்தவொரு எரிபொருளும் விநியோகிக்கப்பட மாட்டாது.
இதனைக் கண்காணிப்பதற்காகப் பெட்ரோல் பங்குகளில் தானியங்கி எண் பலகை அங்கீகார கேமராக்கள் மற்றும் இதர நவீனத் தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்புகளை ஒருங்கிணைக்க டெல்லி மற்றும் பிற மாநில அரசுகளுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் சான்றிதழ் இல்லாத வாகனங்கள் உடனடியாகக் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எரிபொருள் மறுக்கப்படும்.
இதற்கு மட்டும் விதிவிலக்கு:
இருப்பினும், சில அசாதாரண மற்றும் அவசரச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இந்த கடுமையான விதிகளில் இருந்து சில குறிப்பிட்ட விலக்குகள் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசரச் தேவைகள், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புப் பணிகள், பேரிடர் மீட்புப் பணிகள் போன்ற அவசர நிலைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்க டெல்லி மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அடுத்த வருடம் முதல் ஆன்லைனில் நீட் தேர்வு.. மத்திய அமைச்சர் கொடுத்த முழு விளக்கம்!
டெல்லி-NCR பகுதியில் கடந்த சில நாட்களாகக் காற்றின் தரம் தொடர்ந்து திருப்திகரமான மற்றும் மிதமான நிலைக்குக் கீழ் கணிசமாக மேம்பட்டதை அடுத்து, ‘கிராப்’கட்டுப்பாடுகள் அண்மையில் தளர்த்தப்பட்டிருந்த சூழலில், இந்த புதிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நீண்டகால அடிப்படையிலான அதிரடி உத்திகளை ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.