எரிபொருள் தட்டுப்பாடு.. வாரத்தில் 2 நாட்கள் ஆன்லைனில் விசாரணை.. உச்ச நீதிமன்றம் அதிரடி!
இதன் மூலம் அதிகாரப்பூர்வப் பயணங்களுக்கான எரிபொருள் நுகர்வு பெருமளவு குறைக்கப்படும். நீதிமன்றத்தின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கும் எரிபொருள் சிக்கன விதிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றப் பதிவகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் பணிபுரியும் ஊழியர்களில், வாரத்திற்கு அதிகபட்சமாக 50 விழுக்காடு ஊழியர்கள் வரை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேற்காசியப் பகுதியில் நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து, இந்தியாவில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நாட்டின் எரிபொருள் நுகர்வைக் குறைக்குமாறு பிரதமர் மோடி அண்மையில் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். பிரதமரின் இந்த சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்திய உச்ச நீதிமன்றமும் தற்போது களமிறங்கி பல்வேறு அதிரடி நிர்வாகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, உச்ச நீதிமன்றத்தில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை வழக்குகள் அனைத்தும் முழுமையாக ஆன்லைன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக மட்டுமே விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அடுத்த வருடம் முதல் ஆன்லைனில் நீட் தேர்வு.. மத்திய அமைச்சர் கொடுத்த முழு விளக்கம்!
2 நாட்கள் 100% ஆன்லைன் விசாரணை:
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (CJI) சூர்யா காந்த் தலைமையில் நடைபெற்ற முழு நீதிமன்றக் கூட்டத்தில் இதற்கான ஒருமனதான முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற பொதுச் செயலாளர் பாரத் பராஷர் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தச் சுற்றறிக்கையின்படி, உச்ச நீதிமன்றத்தின் ‘இதரப் பணிகள் நாட்களாக’கருதப்படும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பட்டியலிடப்படும் அனைத்து வழக்குகளும், இனிமேல் முழுமையாக வீடியோ கான்பரன்சிங் மூலமாக மட்டுமே விசாரிக்கப்படும்.
நீதிமன்றத்தின் பகுதிநேர வேலை நாட்களிலும் இதே ஆன்லைன் முறையே பின்பற்றப்படும். செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ கலந்துகொள்ளும் ‘ஹைப்ரிட்’ முறை வழக்கம்போலத் தொடரும். ஆன்லைன் விசாரணையின் போது நீதிபதிகளுக்கோ அல்லது வழக்கறிஞர்களுக்கோ எந்தவிதத் தொழில்நுட்ப இடையூறும் ஏற்படக் கூடாது என்பதற்காக, தடையற்ற டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் நிலையான இணைய இணைப்பை உறுதி செய்யுமாறு உச்ச நீதிமன்றப் பதிவகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிபதிகள் ‘கார் பூலிங்’ செய்ய முடிவு:
எரிபொருளை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்குள் ஒரு முன்மாதிரியான முடிவை எடுத்துள்ளனர். நீதிமன்றத்திற்குப் பயணிக்கும்போது நீதிபதிகள் அனைவரும் தங்களுக்குள் ‘கார் பூலிங்’ (Car-pooling) ஒரே வாகனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் பயணிக்கும் முறையைப் பின்பற்ற ஒருமனதாகச் சம்மதித்துள்ளனர். இதன் மூலம் அதிகாரப்பூர்வப் பயணங்களுக்கான எரிபொருள் நுகர்வு பெருமளவு குறைக்கப்படும்.
ஊழியர்களுக்கு 50% ‘வொர்க் ஃபிரம் ஹோம்’:
நீதிமன்றத்தின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கும் எரிபொருள் சிக்கன விதிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றப் பதிவகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் பணிபுரியும் ஊழியர்களில், வாரத்திற்கு அதிகபட்சமாக 50 விழுக்காடு ஊழியர்கள் வரை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வாரத்திற்கு இரண்டு நாட்கள் இந்தச் சலுகையை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான சுழற்சி முறைப் பட்டியலை தயாரிக்குமாறு அந்தந்தப் பிரிவுப் பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நீதிமன்றத்தின் தினசரி நிர்வாகப் பணிகள் இதனால் எவ்விதத்திலும் தொய்வடைந்து விடக் கூடாது என்றும், வொர்க் ஃபிரம் ஹோம் எடுக்கும் ஊழியர்கள் அவசரத் தேவைக்கு எப்போதும் தொலைபேசி வழியே தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தங்கம் வாங்க வேண்டாம்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை.. காரணம் என்ன?
பின்னணி மற்றும் எரிபொருள் விலை உயர்வு:
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமான பகுதியை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. குறிப்பாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் நீடித்து வரும் மோதல்களால், சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலரைத் தாண்டி விற்கிறது. இதன் நேரடிப் பாதிப்பாக, இந்தியாவில் அண்மையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு 3 ரூபாய் வரை உயர்த்தப்பட்டன. இந்த இக்கட்டான பொருளாதாரச் சூழலை எதிர்கொள்ளவே, மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்ட அறிவுறுத்தலின்படி, தற்போது உச்ச நீதிமன்றமும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.