மும்பையில் 4வது நாளாக கனமழை – ரயில், விமான சேவைகள் பாதிப்பு
Mumbai Rains : மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொடர்ந்து 4வது நாளாக கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளம் சூழந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது. ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த விரிவான தகவலை பார்க்கலாம்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் (Mumbai) தொடர்ந்து நான்காவது நாளாக கனமழை பெய்து வருகிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 19, 2025 அன்று மதியம் 3 மணி நிலவரப்படி 300 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த கனமழை காரணமாக சுமார் 8 விமானங்கள் மும்பையில் தரையிறங்க முடியாமல் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. மற்றொரு பக்கம் ரயில் தண்டவாளங்ளில் மழை நீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சியான், குர்லா பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்திருப்பதா கூறப்படுகிறது.
பல இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக சாலைகளில் வெள்ளம் சூழந்துள்ளது. குறிப்பாக குர்லா பகுதியில் சூழ்ந்த வெள்ளம் காரணமாக அந்த பகுதியில் இருந்து 350 பேர் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஐந்து குழுக்கலாக பரிந்து குர்லா மற்றும் கிராந்தி நகர் பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : தரை இறங்கும்போது இண்டிகோ விமானத்தில் பரபரப்பு.. அலறிய பயணிகள்!




பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை
கன மழை காரணமாக மும்பை நகரின் பள்ளிகள், கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் முடப்பட்டுள்ளன. மேலும் பல தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும் படி வேண்டுகோள்விடுத்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. பல இடங்களில் மக்கள் உணவு, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள முதியோர்களும் கர்ப்பிணி பெண்களும் மருத்துவமனை செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, பால்கர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது. மேலும் வருகிற ஆகஸ்ட் 20, 2025 புதன்கிழமை வரை மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
இதையும் படிக்க : ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு.. 46 பேர் பலி.. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம்!
சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள காரணத்தால், பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. நகரின் முக்கிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. சில பேருந்துகள் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் பேருந்துகள் சிக்கிய வீடியோ காட்சிகளும் வெளியாகி வருகின்றன. இந்த கனமழையின் காரணமாக தெற்கு ஒடிசா – சத்தீஸ்கர் இடையே அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றத்தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வருவதாக கூறப்படுகிறது.
நோய்கள் பரவும் அபாயம்
மும்பையில் கனமழை காரணமாக வெள்ள சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மழை நீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் மக்கள் அவசியம் இன்றி வெளியேற வேண்டாம் எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.