மார்ச் முதல் மே வரை வட தமிழ்நாட்டில் கடும் வெப்ப அலை, உடல் நலம் பாதிக்கப்படலாம் – வானிலை மையம் எச்சரிக்கை
Heat Wave Alert : இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வரும் மார்ச் முதல் மே மாதம் வரை வழக்கத்தை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் பதிவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வரும் மார்ச் முதல் மே மாதம் வரை வழக்கத்தை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் பதிவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் மிருத்யுஞ்ஜெய் மோகபத்ரா, நாட்டின் பல மாநிலங்களில் வெப்பநிலை அதிகரித்து உடல் நலம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
எந்த பகுதிகளில் அதிக வெப்பநிலை ஏற்படும்?
ராஜஸ்தான் மாநிலத்தின் மேற்கு பகுதிகள், குஜராத், ஹரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா மாநிலத்தின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள், உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதிகள், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிஷா, சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவித்தார். மேலும், கர்நாடகாவின் வடக்கு மற்றும் தமிழ்நாடு வடக்கு பகுதிகளிலும் அதிக வெப்பநிலை நிலவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தேர்வு அறையில் குழந்தை பெற்ற 10 ஆம் வகுப்பு மாணவி.. ம.பியில் அதிர்ச்சி சம்பவம்!




‘உடல் நலம் பாதிக்கப்படலாம்’
வெப்ப அலையின் காரணமாக முதியவர்கள், குழந்தைகள், வெளிப்புறங்களில் வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் ஏற்கனவே உடல் நல பிரச்னைகள் உள்ளவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் குடிநீர் பயன்பாடும், மின்சார பயன்பாடும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மார்ச் மாதத்தில் நாட்டின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சாதாரண அளவிலோ அல்லது சற்று குறைவாக இருக்கலாம் என்றும், வட கிழக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் மட்டும் அதிக வெப்பம் காணப்படலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை நிலவரம்
வருகிற 2026 மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் மிதமான அளவில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும், நாட்டின் சராசரி மழை அளவு சுமார் 29.9 மில்லிமீட்டர் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் வடகிழக்கு இந்தியா மற்றும் வடமேற்கு, மத்திய பகுதிகளில் வழக்கத்தை விட குறைவான மழை பதிவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பசிபிக் பெருங்கடல் பகுதியில் பலவீனமான கால நிலை காணப்பட்டாலும், வரும் மாதங்களில் அந்த சூழ்நிலை மாற வாய்ப்பு இருப்பதாக உலகளாவிய காலநிலை மாதிரிகள் கணித்துள்ளன.
இதையும் படிக்க : கொல்கத்தாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்..
மேலும் 2026 பிப்ரவரி மாதத்தில் நாடு முழுவதும் 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு குறைந்த அளவு மழை மட்டுமே பதிவாகியுள்ளது. மேலும் அந்த மாதத்தில் கடும் குளிர் அலை இருக்காது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவான தரவுகளின்படி, இந்த 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிகபட்ச வெப்பநிலையில் 10 மடங்கு உயர்ந்த அளவும், குறைந்தபட்ச வெப்பநிலையில் 3 மடங்கு உயர்ந்த அளவும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.