GATE 2027 அலர்ட்: புதிய பாடம், மாற்றிய பாடத்திட்டம்… மாணவர்களே தெரிந்துகொள்ளுங்க
GATE Exam: GATE 2027 தேர்வை ஐஐடி மெட்ராஸ் நடத்த உள்ளது. தேர்வு பிப்ரவரி 6, 7, 13, 14, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெறும். 'ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன்' என்ற புதிய பாடம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முக்கிய பாடங்களின் பாடத்திட்டமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளில் முதுநிலைப் படிப்புகளுக்கான முக்கிய தேசிய நுழைவுத் தேர்வான GATE 2027-ஐ நடத்தும் பொறுப்பை இந்த முறை ஐஐடி மெட்ராஸ் ஏற்றுள்ளது. இதற்கான தேர்வு அட்டவணை, பாடத்திட்ட மாற்றங்கள் மற்றும் முக்கிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இந்த அறிவிப்பு, GATE தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு திட்டமிட்ட முறையில் தயாரிப்பைத் தொடங்கும் வாய்ப்பை வழங்குகிறது. தேர்வு முறை, தகுதித் தகைமைகள் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாத நிலையில், பாடத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் முக்கிய கவனம் பெற்றுள்ளன.
பிப்ரவரி மாதத்தில் ஆறு நாட்கள் நடைபெறும் தேர்வு
GATE 2027 தேர்வு 2027 பிப்ரவரி மாதத்தில் ஆறு நாட்கள் கணினி வழி (CBT) முறையில் நடத்தப்பட உள்ளது. பிப்ரவரி 6, 7, 13, 14, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பல்வேறு பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும். ஒவ்வொரு பாடத்திற்கான நேர அட்டவணை பின்னர் தனியாக அறிவிக்கப்படும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்ப காலக்கெடுவை தவறவிடாமல் முன்கூட்டியே தேவையான ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
புதிய பாடம் மற்றும் திருத்தப்பட்ட பாடத்திட்டம்
GATE 2027-இன் முக்கிய அம்சமாக ‘Robotics and Automation’ என்ற புதிய தேர்வுப் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்த புதிய பிரிவு சேர்க்கப்பட்டிருப்பது மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கும் எனக் கருதப்படுகிறது. அதே நேரத்தில், சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து முக்கிய பாடங்களின் பாடத்திட்டமும் முழுமையாக மறுஆய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பழைய பாடத்திட்டத்தை மட்டுமே நம்பி தயாராகும் மாணவர்கள் புதிய சில தலைப்புகளையும் கவனத்தில் கொண்டு படிப்பைத் திட்டமிட வேண்டியது அவசியமாகிறது.
Also Read: இணைய வசதியின்றி ரூ.2,000 வரை யுபிஐ பணப்பரிவர்த்தனை? NPCI புதிய வசதி.. எப்படி செயல்படும்?
மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
தேர்வு முறை, மதிப்பெண் அமைப்பு மற்றும் தகுதித் தரங்களில் மாற்றம் இல்லாவிட்டாலும், புதிய பாடத்திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தயாராகுவது வெற்றிக்கான முக்கிய அடித்தளமாக இருக்கும். பொதுத் திறனறிவு (General Aptitude) பகுதி வழக்கம்போல அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவாக இடம்பெறும். அதனைத் தொடர்ந்து அவர்கள் தேர்வு செய்த பாடத்திற்கான கேள்விகள் இடம்பெறும். அதிகாரப்பூர்வ பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்து ஒவ்வொரு தலைப்பையும் ஒப்பிட்டு தயாரிப்பை மேற்கொள்வது மாணவர்களுக்கு கூடுதல் நம்பிக்கையையும் சிறந்த மதிப்பெண்களையும் பெற உதவும்.
பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.