வாக்கு எண்ணிக்கையில் மத்திய அரசு ஊழியர்கள்.. உச்சநீதிமன்றத்தை அணுகிய மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு!!
இதில் சட்டவிரோதம் ஏதுமில்லை. வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்துக் கட்சிகளின் முகவர்களும் அங்கே இருப்பார்கள். மேலும், தேர்தல் நடத்தும் அதிகாரியாக (Returning Officer) மாநில அரசு ஊழியரே செயல்படுகிறார். எனவே, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மைக்ரோ அப்சர்வர்கள் இருப்பதை தவறு என்று கூற முடியாது என்றது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன (PSU) ஊழியர்களை மேற்பார்வையாளர்களாக நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் மே 4-ம் தேதி (திங்கட்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. முன்னதாக, தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையின்படி, வாக்கு எண்ணிக்கை பணிகளில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மைக்ரோ அப்சர்வர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முதலில் கல்கத்தா உயர்நீதிமன்றத்தை நாடியது. அங்கு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதையும் படிக்க: ம.பியில் அணைக்கட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் பரிதாபம்.. தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு..
உச்சநீதிமன்றத்தின் முக்கிய அறிவுரைகள்:
திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மத்திய அரசு ஊழியர்கள் நியமிக்கப்படுவது மாநில அரசை விரல் நீட்டிக் குற்றம் சாட்டுவது போல் உள்ளது என்று வாதிட்டார். இதற்குப் பதிலளித்த நீதிபதிகள் அடங்கிய அமர்வு தெரிவித்த முக்கியக் கருத்துகள் வருமாறு, “மத்திய அரசு ஊழியர்கள் உங்களுக்கு எதிராகத்தான் செயல்படுவார்கள் என்று நினைப்பது தவறானது. அரசு ஊழியர்கள் மீது நம்பிக்கை வையுங்கள்” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் முடிவே:
மேலும், யாரை நியமிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விருப்பத்திற்கு உட்பட்டது. இதில் சட்டவிரோதம் ஏதுமில்லை. வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்துக் கட்சிகளின் முகவர்களும் அங்கே இருப்பார்கள். மேலும், தேர்தல் நடத்தும் அதிகாரியாக (Returning Officer) மாநில அரசு ஊழியரே செயல்படுகிறார். எனவே, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மைக்ரோ அப்சர்வர்கள் இருப்பதை தவறு என்று கூற முடியாது.
திரிணாமுல் காங்கிரஸின் வாதங்களை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் தலையிடத் தேவையில்லை எனக் கூறி மனுவை முடித்து வைத்தது. இதன் மூலம், ஏற்கனவே தேர்தல் ஆணையம் திட்டமிட்டபடி மத்திய அரசு ஊழியர்களின் பங்களிப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு:
வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, தேர்தல் புகார்கள் எழுந்த 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள இரண்டு முக்கிய தொகுதிகளில் இந்த மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, மகரஹத் பாசிம் பகுதியில் 11 வாக்குச்சாவடிகள், டைமண்ட் ஹார்பர் பகுதியில் 4 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடக்கிறது.
இதையும் படிங்க: “பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இனி எதிர்காலம் இல்லை!”.. பசுமைப் புரட்சியை நோக்கி நிதின் கட்கரி அதிரடி!!
இந்தத் தொகுதிகளில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகளில் முறைகேடுகள் நடந்ததாக வந்த புகார்களை அடுத்து, அந்த வாக்குப்பதிவு செல்லாது என அறிவித்த தேர்தல் ஆணையம், இன்றைய தினத்தை மறுவாக்குப்பதிவு நாளாக அறிவித்தது.