மேட்ரிமோனி மூலம் மோசடி.. ரூ.2.27 கோடியை இழந்த ஆசிரியை!
பெங்களூருவில் பள்ளி ஆசிரியை ஒருவர் திருமண இணையதளம் மூலம் ரூ.2.27 கோடி மோசடிக்கு ஆளாகியுள்ளார். தன்னை அமெரிக்கர் எனக் கூறி ஒருவன் நட்பை வளர்த்து, திருமணம் செய்வது உள்ளிட்ட பல்வேறு உறுதிகள் கொடுத்து பணத்தை பெற்று வந்துள்ளான். இறுதியில், ஆசிரியை காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

பண மோசடி
கர்நாடகா, அக்டோபர் 7: பெங்களூருவில் மேட்ரிமோனி வலைத்தளம் மூலம் பள்ளி ஆசிரியை ஒருவரிடம் ரூ.2.27 கோடி பண மோசடி நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பல துறைகளும் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அதே துறைகளில் மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் திருமண மேட்ரிமோனி வலைத்தளத்தில் அவ்வப்போது மோசடிகள் நடப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேந்த 59 வயதான பெண் ஒருவர் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்தவர். ஒரு மகன் இருக்கும் நிலையில் இருவரும் வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர். இதனால் தனிமை வாட்டியதால், அந்த பெண் ஒரு வாழ்க்கைத் துணையைப் பெற விரும்பியுள்ளார். இதற்காக ஒரு திருமண போர்ட்டலில் தன்னுடைய விவரங்களைப் பதிவு செய்திருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் அட்லாண்டாவை சேர்ந்த தன்னை அமெரிக்க குடிமகனாக காட்டிக் கொண்ட ஆஹான் குமார் என்ற பெயரில் ஒருவர் மேட்ரிமோனியல் போர்டல் மூலம் இந்த பெண் ஆசிரியையை தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த நபர் துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள ஒரு நிறுவனத்தில் துளையிடும் பொறியாளராக பணியாற்றி வருவதாக தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: வாடிக்கையாளர்களின் ரூ.4.58 கோடி பணத்தை மோசடி செய்த வங்கி மேலாளர்.. உஷாராக இருப்பது எப்படி?
இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் பேசியுள்ளனர். பின்னர் தினமும் உரையாட தொடங்கிய நிலையில் அவர்களின் நட்பு வளர்ந்தது. தொடர்ந்து நாளடைவில் அந்த பெண்ணை ஆஹான் குமார் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார். அவரை தனது மனைவி என்றும் அழைக்கத் தொடங்கியிருக்கிறார்.
அடிக்கடி ஆஹான் குமார் அந்த பெண்ணுக்கு போன் செய்து உடல் நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்து வந்துள்ளார். அவரது முதிர்ந்த நடத்தை, அக்கறையுள்ள மனப்பான்மை போன்றவற்றால் அந்த பெண் ஆசிரியை ஈர்க்கப்பட்ட நிலையில் நேரில் பார்க்காத நபர் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டி ஜனவரி மாதம் தன்னிடம் உணவுக்கு போதுமான நிதி இல்லாததால், உதவி வேண்டும் என கேட்டார்.
நானும் அவர் மீது கொண்ட அன்பு, கருணையின் காரணமாக, அவர் வழங்கிய வங்கி கணக்கிற்கு ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணத்தை அனுப்பினேன். தொடர்ந்து வசிக்கும் இடத்தில் பழுதுபார்க்கும் பணிகள், அதிகாரிகளுக்கு செலுத்த வேண்டிய அபராதம், மருத்துவச் செலவுகள் மற்றும் பிற செலவுகள் போன்ற காரணங்களைக் கூறி, அவர் தொடர்ந்து அந்த பெண்ணிடம் ஆஹான் குமார் கூடுதல் பணம் கேட்பதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.
இதையும் படிங்க: திருமணம் செய்வதாக 50 பெண்களிடம் மோசடி.. சிக்கிய விருதுநகர் இளைஞர்!
பல வங்கிக் கணக்குகள் வழியாக அந்த நபருக்கு மொத்தம் ரூ.2.27 கோடி பணத்தை மாற்றியதாக அப்பெண் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். பணத்தை திரும்பக் கேட்டு பலமுறை கோரிக்கை விடுத்தும், குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு பொய்யான உறுதிமொழிகளை அளித்ததாகவும், பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கூட கூடுதலாக ரூ.3.5 லட்சம் வேண்டும் என ஆஹான் குமார் கேட்டதாகவும், இதன் காரணமாக 2025, அக்டோபர் 3 ஆம் தேதி காவல்துறையை அணுகியதாகவும் அந்த பெண் ஆசிரியை கூறியுள்ளார்.அவரது புகாரின் அடிப்படையில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.