மசூதியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. 6 பேர் பலியான சோகம்!
Delhi Mosque Accident | டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருவதால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நேற்று (ஆகஸ்ட் 15, 2025) மசூதி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

டெல்லி, ஆகஸ்ட் 16 : டெல்லியில் உள்ள உலக புகழ்பெற்ற மசூதி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில், தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த 6 பேர் பரிதாபமாக பலியாகினர். டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், நேற்று (ஆகஸ்ட் 15, 2025) மாலை பெய்த கனமழை காரணமாக மசூதியின் மேற்கூரை இடிந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மசூதியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் பலியான சோகம்
டெல்லியில் யுனஸ்கோவால் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட ஹூமாயூன் கல்லறையில் ஷரீப் பதே ஷா என்ற மசூதி அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்த மசூதியின் மேற்கூரை நேற்று (ஆகஸ்ட் 15, 2025) மாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. மாலை நேரம் என்பதால் மசூதியில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில், மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு.. 46 பேர் பலி.. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம்!




டெல்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொட்டித் தீர்க்கு கனமழை
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அந்த வகையில் தலைநகர் டெல்லியிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் கடந்த வாரம் மட்டும் கனமழை காரணமாக 12-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சேதங்களும், உயிர் பலி எண்ணிக்கைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க : Dausa Road Accident: ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து..10 பேர் உயிரிழப்பு!
டெல்லியின் மற்ற பகுதிகளையும் கடுமையாக பாதித்த கனமழை
டெல்லியை போலவே நொய்டா, குருகிராம், பரிதாபாத், காசியாபாத் போன்ற பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியதால், பெரும்பாலாப பகுதிகளில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 14, 2025 அன்று டெல்லிக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 15, 2025) பெய்த கனமழையில் மசூதி இடிந்து விபத்துக்குள்ளாகி 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.