ஸ்மார்ட்போன் உலகிற்குள் சுருங்கும் மனித உடல்: ‘போன் பாடி’ ஆபத்துகளில் இருந்து தப்பிப்பது எப்படி?
தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்துவதால் கழுத்து, முதுகுத்தண்டு மற்றும் கைகளின் தசைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு 'போன் பாடி' (Phone Body) என்ற புதிய உடல்நலப் பிரச்சினை உருவாகிறது. குனிந்தபடியே திரையைப் பார்ப்பதால் கழுத்து எலும்புகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு 'டெக் நெக்' மற்றும் சுவாசக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
தற்கால நவீன உலகில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகள் நம் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டன. ஆனால், இந்த டிஜிட்டல் சாதனங்களை நாம் தொடர்ந்து பயன்படுத்துவது நமது உடலில் நாம் அறியாத பல எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக பிபிசி ஃபியூச்சர் (BBC Future) வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. கைகளில் ஏற்படும் பலவீனம், மங்கலான கண்பார்வை மற்றும் தவறான உடல் தோரணை போன்ற குறைபாடுகள் ஒட்டுமொத்தமாக ‘போன் பாடி’ (Phone Body) என்று அழைக்கப்படும் ஒரு புதிய உடல்நலப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நாம் அன்றாடம் மொபைல் திரைகளை உற்றுநோக்கும் விதம் நமது தசைகள், எலும்புகள் மற்றும் மூளையின் செயல்பாட்டைக் கூட அமைதியாக பாதித்து வருகிறது என்று மருத்துவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கழுத்துப் பகுதியை பதம் பார்க்கும் ‘டெக் நெக்’ (Tech Neck) பாதிப்பு
நாம் மொபைல் போனைப் பயன்படுத்தும்போது நமது தலையைக் குனிந்து பார்ப்பதால், கழுத்துப் பகுதிக்கு வழக்கத்திற்கு மாறான அதிக அழுத்தம் ஏற்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, இவ்வாறு தொடர்ந்து குனிந்திருப்பதால் கழுத்து மற்றும் முதுகுத்தண்டில் சுமார் 27 கிலோ வரை கூடுதல் எடை அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இந்த தவறான தோரணை நாளடைவில் முதுகுத்தண்டு வடத்தில் உள்ள வட்டு (spinal discs) சேதமடைவதற்கும், தசைப்பிடிப்பு மற்றும் மூட்டு தேய்மானத்திற்கும் வழிவகுக்கிறது. இது ‘டெக் நெக்’ என்று அழைக்கப்படுவதுடன், நீண்ட கால அளவில் நமது நுரையீரலின் சுவாசிக்கும் திறனைக் கூட கணிசமாகக் குறைத்துவிடும் ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கை விரல்களின் பலவீனம் மற்றும் தசைத்திறன் குறைபாடு
தொடர்ந்து கணினியில் அமர்ந்து வேலை செய்வதும், மணிக்கணக்கில் மொபைல் போனை கைகளில் பிடித்து விரல்களால் இயக்குவதும் நமது கைகளின் பிடிமான வலிமையை (Grip Strength) பெருமளவு குறைத்து விடுகிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில், புதிய தலைமுறையினரிடம் கைகளின் பலம் மற்றும் நுணுக்கமான தசைத்திறன்கள் (Fine motor skills) குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. திரைகளில் தொடுவதற்கும் தேய்ப்பதற்கும் (Clicking and Sliding) நமது கைகள் பழகிவிட்டாலும், பேனா பிடித்து எழுதுவது அல்லது கருவிகளைக் கையாள்வது போன்ற துல்லியமான செயல்பாடுகளில் மூளைக்கும் கைகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு பலவீனமடைந்து வருவதாக ஜெர்மனி பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
கண் பார்வையின் மங்கலும் வெளிப்புறக் காற்றின் அவசியமும்
நீண்ட நேரம் திரையைப் பார்ப்பது நேரடியாகக் கண் பார்வையைப் பாதிக்காது என்று சில ஆய்வுகள் கூறினாலும், இதனால் ஏற்படும் மறைமுகப் பாதிப்புகள் மிகவும் அதிகம். டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாட்டால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிவிடுவதால், கண்களுக்குத் தேவையான இயற்கை வெளிச்சம் கிடைப்பதில்லை. சூரிய ஒளியில் நேரத்தைச் செலவிடும்போது மட்டுமே நமது கண்ணின் விழித்திரையில் (Retina) ‘டோபமைன்’ (Dopamine) எனப்படும் வேதிப்பொருள் சுரந்து, கண் பார்வையைப் பாதுகாக்கிறது. எனவே, வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பது மறைமுகமாகக் கண் பார்வை குறைபாட்டிற்கு (Myopia) முக்கியக் காரணமாக அமைகிறது என்று கண் மருத்துவப் பேராசிரியர்கள் விளக்குகின்றனர்.