வயிறு மந்தமாக இருக்கிறதா? சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ!
Summer Digestion Problems: தயிர், மோர், இளநீர், எலுமிச்சை சாறு போன்ற இயற்கை பானங்கள் உடல் சூட்டை தணித்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். காரம், எண்ணெய் உணவுகளை தவிர்த்து போதுமான தண்ணீர் குடிப்பது கோடையில் வயிற்றை பாதுகாக்கும். நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்தை சீராக்க உதவுகின்றன.
தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், காலை நேரத்திலேயே வெப்பத்தின் தாக்கம் உணரப்படுகிறது. வெளியில் சென்று வீடு திரும்பும் பலருக்கும் உடல் சோர்வு, அதிக தாகம் மற்றும் பசி குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, சாப்பிட்ட உணவு சரியாக செரிமானமாகாமல் வயிறு பாரமாக இருப்பது, உப்பசம் மற்றும் அசௌகரியம் போன்றவை வெயில் காலத்தில் அதிகம் காணப்படும் சிக்கல்களாக மாறியுள்ளன. இதனால் உடல்நிலை பாதிக்கப்படுவதோடு, தினசரி செயல்பாடுகளிலும் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கோடை வெப்பம் செரிமானத்தை ஏன் பாதிக்கிறது?
வெயில் அதிகரிக்கும் போது உடல் தன்னைத்தானே குளிர்விக்க அதிகமாக செயல்படுகிறது. இதனால் உடலின் ரத்த ஓட்டம் சருமப்பகுதியை நோக்கி மாறுகிறது. இதன் விளைவாக செரிமான மண்டலத்திற்கு தேவையான ஆற்றல் குறைந்து, உணவு ஜீரணமாகும் வேகம் மந்தமாகிறது. இதனால் நெஞ்செரிச்சல், வயிற்று எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. மேலும், உடலில் நீர்ச்சத்து குறைவதால் குடல் இயக்கமும் பாதிக்கப்படுகிறது. அதேசமயம், கோடை காலத்தில் உணவுகள் விரைவில் கெட்டுப்போகும் அபாயம் இருப்பதால் உணவு நச்சுத்தன்மை பிரச்சனைகளும் அதிகமாகும்.
ஆரோக்கியமான பானங்கள் கோடையில் அவசியம்
வெயில் காலத்தில் அதிக காபி மற்றும் டீ அருந்துவதற்கு பதிலாக இயற்கையான பானங்களை தேர்வு செய்வது சிறந்தது. இளநீர் உடலில் இழக்கும் தாதுக்களை ஈடுசெய்ய உதவுகிறது. மோர் குடிப்பது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எலுமிச்சை சாறு உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, வைட்டமின் சி சத்தை வழங்கி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. நன்னாரி சர்பத், வில்வப்பழம் சாறு போன்ற பாரம்பரிய பானங்களும் கோடை வெப்பத்தை சமாளிக்க சிறந்த தேர்வுகளாக கருதப்படுகின்றன.
குளிர்ச்சியை தரும் பாரம்பரிய உணவுகள்
நம் முன்னோர்கள் கோடை காலத்தில் உடல் சூட்டை கட்டுப்படுத்த சில பாரம்பரிய உணவுகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். தயிர் மற்றும் மோர் போன்றவை குடலுக்கு நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து செரிமானத்தை மேம்படுத்துகின்றன. இதனால் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மையும் குறையும். புதினா இலைகள் செரிமான நொதிகளை தூண்டி உடலுக்கு புத்துணர்ச்சி தருகின்றன.
Also Read: சுயசிந்தனையை அழிக்கும் AI: மனித மூளைக்கு வரும் ஆபத்து குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் பழக்கங்கள்
கோடையில் அதிக காரம், எண்ணெய் மற்றும் வறுத்த உணவுகளை தவிர்ப்பது உடலுக்கு நன்மை தரும். இத்தகைய உணவுகள் செரிமானத்திற்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி உடல் சூட்டை அதிகரிக்கக்கூடும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்குவது அவசியம். குறிப்பாக, ஐஸ் வாட்டருக்கு பதிலாக மண்பானை தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது. மேலும், வெளியே கிடைக்கும் செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து வீட்டில் தயாரித்த ஆரோக்கியமான பானங்களை அருந்துவது வயிற்று பிரச்சனைகளை குறைக்க உதவும்.