IPL 2026: ஜிடியை வீழ்த்துவது மட்டும் போதாது.. சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல இதுதான் வழி..!
CSK Playoff Scenarios: குஜராத் டைட்டன்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்கடித்தால், 14 புள்ளிகள் கிடைக்கும். தற்போது, சிஎஸ்கே 13 போட்டிகளில் இருந்து 12 புள்ளிகளையும், மைனஸ் 0.016 என்ற நிகர ரன் ரேட்டையும் கொண்டுள்ளது. அடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் தங்களது இறுதிப் போட்டிகளில் தோற்க வேண்டும்.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கு இன்று அதாவது 2026 மே 21ம் தேதி வாழ்வா சாவா போட்டியாக உள்ளது. பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் நம்பிக்கையைத் தக்கவைக்க, சிஎஸ்கே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. மாறாக சில விஷயங்களை மேற்கொள்வதும் முக்கியம். அந்தவகையில், பிளே ஆஃப் தகுதிபெற சிஎஸ்கே என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி 2026 மே 21ம் தேதியான இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது . இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்குத் தொடங்கும். இதுவரை இரு அணிகளும் 8 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் குஜராத் டைட்டன்ஸ் 5 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
ALSO READ: முன்னேறிய கேகேஆர்.. கடைசி கட்டத்தில் பிளே ஆஃப் கனவுகள்.. ஐபிஎல் புள்ளி பட்டியல் சொல்வதென்ன?
பிளேஆஃப்களை எட்டுவதற்கான சிஎஸ்கே-வின் சமன்பாடு
இன்று குஜராத் டைட்டன்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்கடித்தால், 14 புள்ளிகள் கிடைக்கும். தற்போது, சிஎஸ்கே 13 போட்டிகளில் இருந்து 12 புள்ளிகளையும், மைனஸ் 0.016 என்ற நிகர ரன் ரேட்டையும் கொண்டுள்ளது. அடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் தங்களது இறுதிப் போட்டிகளில் தோற்க வேண்டும். அவ்வாறு நடந்தால், சிஎஸ்கே, டிசி மற்றும் ஆர்ஆர் தலா 14 புள்ளிகளையும், பிபிகேஎஸ் மற்றும் கேகேஆர் தலா 13 புள்ளிகளையும் பெறும். இதன் மூலம் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் தொடரிலிருந்து வெளியேற்றப்படும்.




அதன்பிறகு, நிகர ரன் விகிதமே சிஎஸ்கே, டிசி மற்றும் ஆர்ஆர் அணிகளில் யார் பிளேஆஃப்களுக்கு முன்னேறுவார்கள் என்பதைத் தீர்மானிக்கும். தற்போது, சென்னையின் நிகர ரன் ரேட் (-0.016), டெல்லியின் (-0.871) ரன் ரேட்டை விடச் சிறப்பாக உள்ளது. ஆனால் ராஜஸ்தானின் (0.083) ரேட்டை விடச் சிறப்பாக இல்லை. எனவே, சென்னையின் ஒரு வெற்றியும் மற்ற போட்டிகளின் முடிவுகளும் மட்டும் போதுமானதாக இருக்காது.
நிகர ரன் ரேட்டை பொறுத்தவரை முன்னிலையில் நீடிக்க வேண்டுமானால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஒரு பெரிய வெற்றியைப் பெற வேண்டியிருக்கும். இதன்மூலம், சென்னை அணியானது ராஜஸ்தானை விட தங்களது நிகர ரன் ரேட்டை மேம்படுத்த வேண்டும். மேலும் கொல்கத்தாவுக்கு எதிராக டெல்லியும் ஒரு பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறக்கூடாது என்றும் சென்னை ரசிகர்கள் பிரார்த்திக்க வேண்டும்.
இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றால், பிளேஆஃப்களில் மீதமுள்ள 1 இடத்திற்காக 4 அணிகள் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும்.
ALSO READ: கடைசி வாய்ப்பு.. பிளே ஆஃப் செல்லுமா சென்னை..? குஜராத்துடன் இன்று மோதல்..!
GT – CSK போட்டி எங்கு நேரலையாக ஒளிபரப்பப்படும்?
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பப்படும். ஜியோஹாட்ஸ்டார் ஆப் மற்றும் இணையதளத்திலும் நேரலை ஒளிபரப்பை காணலாம்.