National Cancer Awarness day 2025: புற்றுநோய் குறித்து அச்சம் தவிர்ப்போம், விழிப்புணர்வு கொள்வோம்!!
Cancer Awarness: புற்றுநோய் குறித்து படித்தவர்களிடமே போதிய விழிப்புணர்வு இல்லாதபோது, பாமர மக்களிடம் இந்த விழிப்புணர்வை எப்படி கொண்டு சேர்க்க முடியும். இந்தியாவின் நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்தே காணப்படுகிறது. சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி உள்ளிட்டவை மூலம் இந்நோயைத் தவிர்க்கலாம்.
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் (நவம்பர் 7) என்பது இந்தியாவில் முக்கியமான ஒரு நாளாகும். இது நாட்டில் அதிகரித்து வரும் புற்றுநோயின் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அனுசரிக்கப்படுகிறது. பலவிதமான புற்றுநோய் வகைகள் குறித்து புரிந்துகொள்வதற்கும், அவற்றை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது மற்றும் தடுப்பது குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஊக்குவிப்பதற்கும் இது உதவுகிறது. தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தின கொண்டாட்டமானது, உலகம் முழுவதும் உள்ள NGOக்கள், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார செயற்பாட்டாளர்களுக்கு புற்றுநோய் குறித்த தீவிர விவாதங்களை நடத்தும் வாய்ப்பை வழங்குகிறது. அதோடு, புற்றுநோய் கண்டறிதல் முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கிறது.
Also read: Health Tips: வயிற்றை அழுத்தி தூங்குவது நல்லதா..? உடலில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்?
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்:
கடந்த 2014ம் ஆண்டு முதல் நவ.7ம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் முதலில் புற்று நோய்க்கான ரேடியோதெரபி சிகிச்சைக்கு அடித்தளமிட்டவர் இருமுறை நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் பெண் விஞ்ஞானி மேரி கியூரி. இதனை அங்கீகரிக்கும் விதமாகவே அவரது பிறந்த தினமான நவ.7ல் மத்திய அரசு சார்பில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.




2040க்குள் இரட்டிப்பாகும் அபாயம்:
நாட்டில் புற்றுநோய் என்பது தற்போது மிகவும் அதிகரித்துள்ள சவால்களில் ஒன்றாகும். ஒழுங்கற்ற உணவுப் பழக்கம், பதப்படுத்தப்பட்ட மற்றும் நொறுக்குத் தீனிகளின் நுகர்வு, மாசுபாடு மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் 2024ஆம் ஆண்டில் மட்டும் 15.6 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். அதுவே, 2023 ஆம் ஆண்டில், இந்தியாவில் 14.96 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இப்படி ஆண்டுக்கு ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2040க்குள் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் இரட்டிப்பாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது, இந்த நோயை ஒற்றுமையாக எதிர்த்துப் போராடி சரியான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரம் இது என்று சொன்னால் தவறில்லை. சுற்றுச்சூழலே, புற்றுநோய் வருவதற்கு முக்கியக் காரணியாகும். புகை, துாசு, என்று மாசுபட்டிருப்பது இந்நோய்க்கு வழிவகுக்கிறது. வாய், தொண்டை, நுரையீரல் புற்றுநோய்க்கு புகையும், மார்பக புற்றுநோய்க்கு ஹார்மோன்களும் காரணமாகிறது. மேலும் உணவுமுறை, மரபணு போன்றவையும் ஒரு சில காரணிகளே.
புற்றுநோய் அறிகுறிகள்:
மருக்கள் பெரிதாவது, திடீரென உடல் எடை குறைவது, 10, 15 நாட்களாகியும் காய்ச்சல் குணமாகாதது, நீண்ட நாட்களாக சளி, இருமல் நீடிப்பது, மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறுவது, குரல்வளையில் மாற்றம் ஏற்படுவது உள்ளிட்டவற்றை புற்றுநோய் உருவாகும் எச்சரிக்கை அறிகுறிகளாக கொள்ளலாம். அதோடு, ஒவ்வொரு பகுதியில் வரும் நோய்க்கு அறிகுறிகள் மாறுபடும். மார்பு, கழுத்து பகுதியில் கட்டிகள் வரலாம். உதடு, நாக்கு பகுதியில் நீண்ட நாள் ஆறாத புண்கள், மிருதுவான தசை இருக்கலாம். அதனால், இதில் எந்த அறிகுறிகள் தென்பட்டாலும் ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்வது அவசியம்.
ALSO READ: டீ குடித்தவுடனே ஐஸ் வாட்டர் குடிப்பீர்களா..? இந்த 5 பிரச்சனைகள் வரலாம்!
மருத்துவர்கள் வலியுறுத்துவது, புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டால், நோயின் தாக்கத்தை குறைத்து, சிகிச்சையை பலப்படுத்த முடியும் என்பதே. பொதுமக்கள் மாத்திரைகளில் மட்டுமல்லாமல், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புற்றுநோய் ஸ்கிரீனிங் செய்யும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக, வயது மற்றும் குடும்ப வரலாறுகளை கருத்தில் கொண்டு, வருடாந்திர பரிசோதனைகள் மிகவும் அவசியம். முன்பு, அறுவை சிகிச்சையில், பாதித்த இடத்தையே முழுவதுமாக அகற்றி விடுவர். அதற்கு பதிலாக இப்போது, கட்டியை மட்டும் எடுக்கும்படி மருத்துவம் வளர்ந்துவிட்டது.
புற்றுநோயயை வெல்வோம்:
புற்றுநோய் பாதிப்பு என்பது வெல்ல முடியாத ஒன்றல்ல. முன்னெச்சரிக்கையாலும், முறையான சிகிச்சையாலும் தடுக்கவும், குணப்படுத்தவும் முடியும். இந்த விழிப்புணர்வு நாளில் புற்றுநோய்க்கு எதிராக வழிமுறைகளை கடைபிடித்து செயல்படுவோம் என உறுதிமொழி ஏற்போம்.