H1N1 காய்ச்சல் பரவல்: ஃப்ளூ தடுப்பூசி யாரெல்லாம் கட்டாயம் செலுத்த வேண்டும்?
H1N1 Flu Vaccine: ஃப்ளூ காய்ச்சல் பரவி வரும் இக்காலக்கட்டத்தில், அதிக ஆபத்துள்ள பிரிவினர் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற்றுத் தடுப்பூசி செலுத்திக் கொள்வது நோயின் தீவிரத்திலிருந்தும் அவசர மருத்துவச் செலவுகளிலிருந்தும் பாதுகாக்கும். பரவல் தொடங்கிய பிறகு தடுப்பூசி போடுவது பலன் தருமா என்பது குறித்தான விரிவான மருத்துவ ஆலோசனைகளை இங்கு காண்போம்.
நாட்டில் H1N1 மற்றும் பருவக்கால ஃப்ளூ (Influenza) பாதிப்புகள் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் ஃப்ளூ தடுப்பூசிக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் சேவைகள் மற்றும் பரிசோதனைகளுக்கான முன்பதிவுகள் கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு உயர்ந்துள்ளன. இந்நிலையில், இந்தத் தடுப்பூசியை யார் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் பரவல் தொடங்கிய பிறகு தடுப்பூசி போடுவது பலன் தருமா என்பது குறித்தான விரிவான மருத்துவ ஆலோசனைகளை இங்கு காண்போம்.
H1N1 தொற்று நிலவரமும் தடுப்பூசியின் அவசியமும்
H1N1 வைரஸ் என்பது 2009-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருந்தொற்றோடு முடிந்துவிடாமல், தற்போதும் பருவக்கால ஃப்ளூ காய்ச்சலின் ஒரு பகுதியாகத் தொடர்ந்து பரவி வருகிறது. இந்த வைரஸ்கள் தொடர்ந்து மரபணு மாற்றம் அடைவதாலும், முந்தைய தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்புத் திறன் காலப்போக்கில் குறைவதாலும் ஆண்டுதோறும் புதிய தடுப்பூசி செலுத்துவது அவசியம். தற்போதைய புதிய ஃப்ளூ தடுப்பூசிகள் தற்போது பரவி வரும் H1N1 வைரஸ் வகைகளுக்கு எதிராகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி யாருக்கெல்லாம் மிக மிக முக்கியம்?
சாதாரண ஆரோக்கியமான நபர்களுக்கு ஃப்ளூ காய்ச்சல் சில நாட்கள் அசௌகரியத்தைத் தந்தாலும், குறிப்பிட்ட சில பிரிவினருக்கு இது தீவிர நிமோனியா, மூச்சுத்திணறல் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழலை உருவாக்கக்கூடும். குறிப்பாக:
65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள்.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள்.
ஆஸ்துமா, சர்க்கரை நோய், இதய நோய்கள், சிறுநீரகக் கோளாறு, புற்றுநோய் மற்றும் நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள்.
நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் மருத்துவத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள்.
கர்ப்ப காலத்தில் தடுப்பூசியின் பங்கு
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஃப்ளூ தடுப்பூசி செலுத்துவது தாய்க்கு மட்டுமல்லாமல், பிறக்கப்போகும் குழந்தைக்கும் இரட்டைப் பாதுகாப்பை அளிக்கிறது. தாயிடமிருந்து குழந்தைக்குச் செல்லும் ஆன்டிபாடிகள் (Antibodies), தடுப்பூசி செலுத்த முடியாத 6 மாதத்திற்கும் குறைவான வயதுடைய சிசுக்களுக்கு ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதை சுமார் மூன்றில் ஒரு பங்கு வரை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பரவல் தொடங்கிய பின் தடுப்பூசி பலன் தருமா?
பொதுவாகத் தொற்று தீவிரமடைவதற்கு முன்பே தடுப்பூசி எடுத்துக்கொள்வது சிறந்தது. ஏனெனில், உடலில் எதிர்ப்புச் சக்தி உருவாகப் தடுப்பூசி போட்டதிலிருந்து சுமார் இரண்டு வாரங்கள் ஆகும். இருப்பினும், பரவல் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையிலும் தடுப்பூசி போடுவது வீண் போகாது. இது 100% தொற்றைத் தடுக்காவிட்டாலும், நோய் தீவிரமடைவதையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஆபத்தையும் 30% முதல் 40% வரை கணிசமாகக் குறைக்கிறது.
பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.