“ஆரோக்கியம்” என்ற பெயரில் ஏமாற்று வேலையா? சிக்கிய 8 பிரபல நிறுவனங்கள்
FSSAI Issues Notices: மக்களின் ஆரோக்கியத் தேவையைக் குறிவைத்து "மைதா இல்லாதது", "உண்மையான வைட்டமின்" போன்ற கவர்ச்சியான வார்த்தைகளால் நுகர்வோரைத் தவறாக வழிநடத்திய இமாமி, நியூஹெர்ப்ஸ் உள்ளிட்ட 8 முன்னணி உணவு நிறுவனங்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முறையான அறிவியல் சான்றுகளோ அல்லது உணவு வாரியத்தின் முன் அனுமதியோ இன்றி தங்களது தயாரிப்புகளை மிகைப்படுத்தி விளம்பரம் செய்ததே இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணமாகும்.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), நுகர்வோரை ஏமாற்றும் வகையில் தங்களது தயாரிப்புகள் அதிக ஆரோக்கியமானவை என்று பொய்யான விளம்பரங்களைச் செய்த எட்டு முன்னணி உணவு நிறுவனங்களுக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் 2006-ன் கீழ் இந்த கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முறையான அறிவியல் சான்றுகள் அல்லது அனுமதியின்றி, உணவுப் பொட்டலங்களின் மீது கவர்ச்சிகரமான மற்றும் தவறான ஆரோக்கியக் குறியீடுகளைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராக இந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிக்கலில் சிக்கிய 8 முன்னணி நிறுவனங்கள்
பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அமைப்பின் கண்காணிப்பில் சிக்கிய அந்த எட்டு நிறுவனங்கள்: இமாமி ஹெல்தி & டேஸ்டி (Emami Healthy & Tasty), ஹெல்த் எய்ட் (Health Aid), ட்ரூவி (Troovy), தி ஹெல்தி ஃபேக்டரி (The Healthy Factory), ஹெல்தி மாஸ்டர் (Healthy Master), ஹெல்தி சாய்ஸ் (Healthy Choice), பிளான் பி (Plan B) மற்றும் நியூஹெர்ப்ஸ் (Neuherbs) ஆகும். இந்த நிறுவனங்கள் “ஆரோக்கியமானது” (Healthy), “மைதா இல்லாதது” (Zero Maida), “உண்மையான வைட்டமின்” (True Vitamin) மற்றும் “தாவர அடிப்படையிலான வேகன்” (Plant-based vegan) போன்ற வார்த்தைகளை விதிமுறைகளுக்குப் புறம்பாகப் பயன்படுத்தி நுகர்வோரிடம் தவறான எண்ணத்தை உருவாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இமாமி நிறுவனத்தின் வர்த்தகப் பெயர் குறித்து கேள்வி
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல இமாமி லிமிடெட் நிறுவனத்தின் சமையல் எண்ணெய் பிரிவான ‘இமாமி ஹெல்தி & டேஸ்டி’ இந்த விசாரணையில் முக்கியமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் வர்த்தகப் பெயரே (Trade Name) நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் வகையில் அமைந்துள்ளதாக எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ தெரிவித்துள்ளது. முறையான ஒழுங்குமுறை ஆதரவோ அல்லது சான்றுகளோ இல்லாமல், இத்தகைய பெயர்கள் தயாரிப்பின் ஆரோக்கிய நன்மைகளை மிகைப்படுத்திக் காட்டுவது தற்போதைய உணவு லேபிளிங் மற்றும் விளம்பர விதிகளுக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அனுமதியற்ற ‘வேகன்’ விளம்பரங்கள்
‘பிளான் பி’ என்ற நிறுவனம் தனது தயாரிப்புகளை “தாவர அடிப்படையிலான வேகன்” (Plant-based vegan) என்று சந்தைப்படுத்தி வந்தது. ஆனால், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ உரிம விதிகளின்படி தேவையான முன் அனுமதியைப் பெறாமல், இந்த நிறுவனம் தங்களைச் சான்றளிக்கப்பட்ட வேகன் தயாரிப்பு என விளம்பரம் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சைவ மற்றும் வேகன் உணவுக்கான அங்கீகாரத்தைப் பெற குறிப்பிட்ட விதிமுறைகள் உள்ள நிலையில், அனுமதியின்றி இதைப் பயன்படுத்துவது சட்ட மீறலாகும் என்று கட்டுப்பாட்டு வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
மைதா இல்லாத ரொட்டி மற்றும் பீட்சா சர்ச்சை
‘தி ஹெல்தி ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்கும் “ஜீரோ மைதா முழு கோதுமை ரொட்டி” (Zero Maida Whole Wheat Bread) மற்றும் “ஜீரோ மைதா பீட்சா பேஸ்” ஆகிய தயாரிப்புகளும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த தயாரிப்புகளில் சக்கி ஃபிரஷ் ஆட்டா மற்றும் கோதுமை பசையம் (Wheat gluten) போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், “மைதா இல்லை” என்ற இவர்களது வாதம் உண்மையிலேயே தயாரிப்பின் தன்மையைப் பிரதிபலிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Also Read: இரவில் அழும் சுட்டீஸ்… நிம்மதியாய் தூங்க வைக்க இதோ சூப்பர் டிப்ஸ்!
துரித உணவுகளுக்கு ஆரோக்கியப் முத்திரை
ஊட்டச்சத்து பிராண்டான ‘நியூஹெர்ப்ஸ்’ தனது தயாரிப்புகளை “ட்ரூ வைட்டமின்” என்ற லேபிளின் கீழ் விற்பனை செய்தது. ஆனால் உணவுப் பாதுகாப்பு விதிகளில் இப்படி ஒரு வகைப்பாடு இல்லை என்பதால் இது நுகர்வோரை ஏமாற்றும் செயல் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. அதேபோல், ‘ட்ரூவி’ நிறுவனம் தனது காய்கறி சிப்ஸ் மற்றும் ராகி சிப்ஸ் போன்ற தயாரிப்புகளில் பலதரப்பட்ட பொருட்கள் கலந்திருந்தாலும், தொடர்ந்து “ஹெல்தி” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வந்துள்ளது. துரித உணவுகளில் இத்தகைய வார்த்தைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது நுகர்வோரைத் திசைதிருப்பும் செயல் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.