பாடல்களை படங்களில் பயன்படுத்த மட்டுமே அனுமதி… இளையராஜாவுக்கு ஆதரவாக ஆர்.கே.செல்வமணி சாட்சி
Ilaiyaraaja's Copyright Case: இளையராஜாவின் காப்புரிமை தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இயக்குநர் ஆர்.கே.செல்வணி நீதிமன்றத்தில் ஆஜராகி, இளையராஜா திரைப்படங்களில் மட்டுமே பாடல்களை பயன்படுத்த அனுமதி வழங்கியதாக தெரிவித்துள்ளார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
பாடல் காப்புரிமை தொடர்பான வழக்கில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு (Ilaiyaraaja) ஆதரவாக இயக்குநர் ஆர்.கே. செல்வமணி நேரில் ஆஜராகி சாட்சி அளித்துள்ளார். இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, 8,500-க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கியுள்ளார். கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற ‘வாலியன்ட்’ சிம்பொனி நிகழ்ச்சியின் மூலம் உலக சாதனையும் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காப்புரிமை வழக்கு
இந்த நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு ‘மியூசிக் மாஸ்டர்’ என்ற இசை நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், ‘பாண்டியன்’, ‘குணா’, ‘தேவர் மகன்’ உள்ளிட்ட 109 திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் இசை வெளியீட்டு உரிமைகள், இளையராஜாவின் மனைவி ஜீவா நடத்தி வந்த இசை நிறுவனத்திடமிருந்து தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், அந்த பாடல்களை யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது எனத் தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகினர்.
இதையும் படிக்க : Silambarasan: ‘உண்மையான திருவிழா ஜன நாயகன் ரிலீஸ் அப்போதான்’- தளபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிலம்பரசன்!




இந்த வழக்கில் இளையராஜா நேரில் ஆஜராகி ஏற்கனவே சாட்சியம் அளித்திருந்தார். இந்நிலையில், வழக்கு ஜனவரி 8, 2026 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 1997 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் யூடியூப் மற்றும் சமூக வலைதளங்கள் குறித்து எந்த குறிப்பும் இல்லை என்றும், அந்த ஒப்பந்தம் முழுவதும் ஆடியோ வெளியீட்டிற்கான உரிமைகள் குறித்தே இருந்தது என்றும் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தனர்.
இளையராஜாவுக்கு ஆதரவாக சாட்சி சொன்ன ஆர்.கே.செல்வமணி
இந்த நிலையில் இந்த வழக்கில் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவர் தனது வாக்குமூலத்தில், இளையராஜா தனது பாடல்களின் காப்புரிமையை ஒருபோதும் தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதில்லை என்றும், பாடல்களின் முழு உரிமையும் இசையமைப்பாளரான இளையராஜாவிடமே இருப்பதாகவும் தெரிவித்தார். தயாரிப்பாளர்களுக்கு, அந்த பாடல்களை திரைப்படத்தில் பயன்படுத்துவதற்கான உரிமை மட்டுமே வழங்கப்பட்டதாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறினார்.
இதையும் படிக்க : ஜன நாயகன் சென்சார் பிரச்சனை… தளபதி விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய கோலிவுட் சினிமா
இயக்குநர் ஆர்.கே. செல்வமணியின் இந்த சாட்சியத்தை பதிவு செய்த நீதிமன்றம், வழக்கின் மேலதிக விசாரணையை இந்த மாதம் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கு, இசையமைப்பாளர்களின் காப்புரிமை உரிமைகள் தொடர்பான முக்கிய வழக்காக கருதப்படுவதால், திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.