நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா… இளையராஜாவிற்கு இன்று பிறந்த நாள்
Music Director Ilaiyaraaja: ரசிகர்களால் இசை ஞானி என்று அன்புடன் அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே அதிகம் பிடித்தமான இசையமைப்பாளராக உள்ளார். இந்த நிலையின் இன்று பிறந்த நாள் கொண்டாடும் இளையராஜாவிற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே என்ற பாடல் வரிகளை தனக்கானதாக மாற்றிக்கொண்டவர் இசையமைப்பாளர் இளையராஜா (Music Director Ilaiyaraaja). இசையில் பல ஜாலங்கள் செய்து நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான் ராஜா என்பது போல ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறார் இளையராஜா. இவரது இசையில் முன்னதாக 1970-களில் தொடங்கி தற்போது வரை வெளியான பாடல்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். தமிழ் சினிமாவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இளையராஜாவிற்கு தற்போது உள்ள 2கே கிட்ஸ்கள் வரை ரசிகர்கள் உள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை. இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் இளையராஜாவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் தங்களது பிறந்த நாள் வாழ்த்துகலை தெரிவித்து வருகின்றனர்.
இசையமைப்பாளராக இளையராஜா அறிமுகம் ஆனப் படம்:
தமிழ் சினிமாவில் கடந்த 1976-ம் ஆண்டு இயக்குநர்கள் தேவராஜ் மற்றும் மோகன் ஆகியோர் இயக்கத்தில் வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் இளையராஜா. இந்தப் படத்தில் நடிகர்கள் சிவக்குமார் மற்றும் சுஜாதா இருவரும் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தான் இசையமைத்த முதல் படத்தின் மூலமாக தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார் இளையராஜா.
தென்னிந்திய மொழிகளிலும் ரசிகர்களை கொண்டுள்ள இளையராஜா:
தமிழ் சினிமாவில் பெரும்பாலானா பாடல்களை இசையமைத்துள்ள இசையமைப்பாளர் இளையராஜா, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழி இவர் இசையமைத்த பாடல்களுக்கு தமிழ் நாட்டில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் உள்ள ரசிகர்களிடையேயும் பிரபலமாக உள்ளார். குறிப்பாக மலையாள ரசிகர்கள் இவரின் பாடல்களை முனுமுனுக்காமல் இருந்தது இல்லை என்றே சொல்லாம்.
பிரபலங்கள் கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜா:
இளையராஜா தங்களது படங்களில் இசையமைக்க வேண்டும் என்று விரும்பாத நடிகர்களே இருக்க முடியாது என்று கூறலாம். அப்படி இளையராஜா தங்களது படங்களுக்கு இசையமைக்கிறார் என்றால் அதனை தங்கள் வாழ்நாள் பாக்கியமாக பல நடிகர்கள் வெளிப்படையாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. இளையராஜாவின் பாடல்களை தங்களது வாழ்க்கையையுடன் ஒப்பிட்டு பிரபலங்கள் பலர் பேசியுள்ளது நாம் அறிந்ததே.
2கே கிட்ஸ்கள் கொண்டாடும் இளையராஜாவின் இசை:
தமிழ் சினிமாவில் தற்போதைய காலக்கட்டத்தில் பல இசையமைப்பாளர்கள் இருந்தாலும் இளையராஜாவின் எவர்கிரீன் பாடல்களுக்கு தற்போது உள்ள 2கே கிட்ஸ்களும் அடிமை தான். சமீபத்தில் வெளியாகும் படங்களில் இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கிறது என்றால் திரையரங்குகளே அதிரும் அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஒருபுறம் இதற்காக காப்பி ரைட்ஸ் என்ற வழக்கை இளையராஜா தொடுத்தாலும் அவருடைய அனுமதி உடன் சில படங்களில் அவரின் பாடல்கள் தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஆதர்சன இசையமைப்பாளர் இளையராஜா:
1970களில் தொடங்கி தற்போது உள்ள முன்னணி நடிகர்கள் வரை தங்களது ஆதர்சன இசையமைப்பாளராக இளையராஜாவை வைத்துள்ளனர். அவர்கள் நடிக்கும் படங்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என்று சில நடிகர்கள் காத்திருப்பதும் இங்கு நடக்கத்தான் செய்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் தொடங்கி தற்போது உள்ள விஜய் சேதுபதி வரை பலரின் படங்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் இசையமைப்பாளராக மட்டும் இன்றி பாடல்கள் எழுதிவதிலும் சிறந்து விளங்குபவர் என்பது குறிப்பிடத்தக்கது.