Cinema Rewind: பிரபல நடிகருக்கு அம்மாவாக நடிக்க மறுத்த நடிகை தேவயானி!
Devyani About SJ Suryah : தமிழ் சினிமாவில் 90ஸ் மற்றும் 2000ம் ஆண்டு தொடக்கத்தில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் தேவயானி. இவர் முன்னதாக பேசிய நிகழ்ச்சி ஒன்றில், தெலுங்கில் பிரபல நடிகருக்கு அம்மாவாக நடிக்கமாட்டேன் என்று கூறியதை பற்றிப் பேசியுள்ளார். அது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

நடிகை தேவயானியின் (Devayani) நடிப்பில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்கள் வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. இவர் கடந்த 90ஸ் மற்றும் 2000ம் ஆண்டு தொடக்கத்தில் பல ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். இவர் கடந்த 1993ம் ஆண்டு வெளியான ஷாட் பொன்சோமி (Shaat Ponchomi) என்ற வங்காள மொழி படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, இவருக்குத் தமிழில் முதல் படமாக அமைந்தது தொட்டா சிணுங்கி (Thotta Chinungi). கடந்த 1995ம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குநர் கே.எஸ். அதியமான் இயக்கியிருந்தார். இந்த படத்தின் மூலம் தமிழில் பிரபலமான இவருக்குப் பல படங்கள் தொடர்ந்து அமைந்தது. இவர் நடிகர்கள் சரத்குமார் முதல் விஜய் வரை பல பிரபல நடிகர்களுக்கும் ஜோடியாக இணைந்து நடித்திருக்கிறார். திருமணத்திற்குப் பின் படங்களில் கதாநாயகியாக நடிப்பதைக் குறித்த நடிகை தேவயானி படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.
தமிழ், தெலுங்கு போன்ற படங்களில் அம்மா மற்றும் சிறப்புக் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும் பல ஆண்டுகளுக்குப் பின் இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான படம் நிழற்குடை. இந்தப் படமானது கடந்த 2025, மே மாதத்தில் வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிகை தேவயானி நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் முன்னதாக பேசிய நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.ஜே. சூர்யாவின் (S.J.Suryah) இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான நியூ படத்தில் நடித்த அனுபவம் குறித்தும், முதலில் நடிக்க மறுத்தது குறித்தும் பேசியுள்ளார்.




எஸ்ஜே சூர்யாவின் நியூ படத்தில் நடிக்க முதலில் மறுத்தது பற்றி தேவயானி பேச்சு :
முன்னதாக நடிகை தேவயானி கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், எஸ்.ஜே. சூர்யாவிடன் நியூ மற்றும் தெலுங்கில் நானி படத்தில் பணியாற்றியது பற்றி பேசியிருந்தார். அதில் நடிகை தேவயானி., “முதலில் எஸ்.ஜே. சூர்யா தெலுங்கில் நானி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அம்மாவாக நடிப்பதற்குத்தான் என்னை அழைத்தனர். உடனே நான், “நான் மகேஷ் பாபாவுக்கு அம்மாவாக, நான் நடிக்கமாட்டேன் எனக்கு அப்படி ஒரு ரோல் வேண்டவே வேண்டாம்” என்றுதான் அவரிடம் முதலில் கூறினேன். உடனே 10 நிமிடத்தில் வீட்டிற்கு வந்து அந்த படத்தின் கதையை என்னிடம் கூறினார். நீங்கள்தான் நிச்சயமாக அந்த படத்தில் நடிக்கவேண்டும் என்று எஸ்.ஜே. சூர்யா என்னிடம் காலில் விழாத குறையாகக் கேட்டார்.
அந்த படத்தில் இடம் பெரும் ஒவ்வொரு காட்சிகளையும் எனது வீட்டில் விழுந்து, எழுந்து மும்முரமாக நடித்துக் காண்பித்தார். அப்படியே எனக்கு அந்த கதையைப் பிடிக்கவைத்து இந்த படத்திலும் நடிக்க வைத்துவிட்டார். சரி நான் தெலுங்கில் நடிக்கிறேன் என்று கூறினேன், தெலுங்கில் வந்தபிறகும் மீண்டும் தமிழிலும் நீங்கள்தான் நடிக்கவேண்டும் என்றும் அவர் கூறினார். பின் நானும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன், பின் எப்படியோ அந்த படத்திலும் என்னை அம்மாவாக நடிக்க வைத்து விட்டார் என்று நடிகை தேவயானி பேசியிருந்தார்.