முத்தமிட முயன்ற பிரபல இயக்குநர்.. அர்ஜூன் பட நடிகை குற்றச்சாட்டு
பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழும் சுர்வீன் சாவ்லா தனது சினிமா வாழ்க்கையில் எதிர்கொண்ட விரும்பத்தகாத சம்பவங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார். இயக்குநர்களிடமிருந்து அவர் அனுபவித்த எதிர்பாராத நிகழ்வுகள் மற்றும் உடல் அவமதிப்பு போன்றவை பற்றி அவர் பேசியுள்ளது திரையுலகில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ள நடிகை சுர்வீன் சாவ்லா (Surveen Chawla) நேர்காணல் ஒன்றில் திரையுலகில் தனக்கு நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள் பற்றி வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழில் வசந்த் இயக்கத்தில் வெளியான மூன்று பேர் மூன்று காதல் (Moondru Per Moondru Kadhal) படத்தில் நடிகர் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தவர் சுர்வீன் சாவ்லா. தொடர்ந்து ஜெய்ஹிந்த் 2, புதிய திருப்பங்கள் ஆகிய படங்களில் மட்டுமே நடித்தார். இந்நிலையில் இவர் Hauterrfly தளத்திற்கு அளித்த ஒரு நேர்காணலில், நான் உங்களுக்கு மும்பையின் வீர தேசாய் சாலையில் நடந்த ஒரு கதையை பற்றி சொல்கிறேன். அங்கிருக்கும் ஒரு இயக்குநரின் அலுவலக அறையில் சந்திப்பு ஒன்று நடந்தது. அந்த நேரம் தான் எனக்கு திருமணாகியும் இருந்தது. அந்த நிகழ்வும் முடிந்ததும் அவர் என்னை வாசல் கேட் வரை வந்து வழியனுப்ப வந்தார். அப்போது ஒரு சம்பவம் நடந்தது. அதாவது அந்த இயக்குநருடனான சந்திப்பிலும் நாங்கள் என்னுடைய திருமண வாழ்க்கையைப் பற்றி பேசினோம்.
சினிமாவில் நடந்த கசப்பான அனுபவம்
தொடர்ந்து, நான் அவரிடம் விடைபெற்று செல்ல முயன்ற நிலையில் அந்த இயக்குநர் என்னை நோக்கி சாய்ந்து முத்தமிட முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நான் அவரை பின்னுக்கு தள்ளி விட்டேன். என்ன செய்றீங்க என நான் கோபத்துடன் கேட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டேன். அதேபோல் தென்னிந்திய சினிமாத்துறையைச் சேர்ந்த ஒரு இயக்குநர் என்னை அவருடன் தனிமையில் நேரம் செலவிட வைக்க விரும்பினார். ஆனால் அவருக்கு இந்தி அல்லது ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாததால், மூன்றாவது நபர் மூலம் தனது நோக்கத்தைத் தெரிவித்ததாக சுர்வீன் சாவ்லா முந்தைய நேர்காணலில் கூறியிருந்தார்.
மேலும் நான் ஆரம்பத்தில் சின்னத்திரையில் நடித்திருந்த நிலையில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது என்னுடைய தோற்றம் வெகுவாக விமர்சிக்கப்பட்டது. எடை, இடுப்பு, உடலமைப்பு அனைத்தையும் வெளிப்படையாகவே சுட்டிக்காட்டி கருத்து தெரிவிக்கப்பட்டது. அப்படி இருந்தால் தான் ரசிப்பார்கள் என அவர்கள் சொன்னதைக் கேட்டு தான் அதிருப்தியடைந்ததாகவும் சுர்வீன் சாவ்லா கூறியுள்ளார்.
யார் இந்த சுர்வீன் சாவ்லா?
View this post on Instagram
சுர்வீன் சாவ்லா கடந்த 2003 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கஹின் டூ ஹோகா என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கசௌதி ஜிந்தகி கே, காஜல் மற்றும் 24 போன்ற சின்னத்திரை தொடர்களிலும் தலை காட்டினார். பின்னர் 2008 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான பரமேஷா பன்வாலா மூலம் சினிமாவுலகில் எண்ட்ரி கொடுத்தார். அதனையடுத்து பாலிவுட்டில் ஹம் தும் ஷபானா, அக்லி, ஹேட் ஸ்டோரி 2, பார்ச்ட் மற்றும் சுரி போன்ற குறும்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் பஞ்சாபி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.