நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!
வயது மூப்பு காரணமாக நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (84) காலமானார். தொடர்ந்து, சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டில் அவரது தாயாருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தின்போது துபாயில் இருந்த நடிகர் அஜித்குமார், தாயாரின் மறைவுச் செய்தியைக் கேட்டு உடனடியாகச் சென்னைக்கு விரைந்துள்ளார்.
வயது மூப்பு காரணமாக நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (84) காலமானார். தொடர்ந்து, சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டில் அவரது தாயாருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தின்போது துபாயில் இருந்த நடிகர் அஜித்குமார், தாயாரின் மறைவுச் செய்தியைக் கேட்டு உடனடியாகச் சென்னைக்கு விரைந்துள்ளார்.
இதையும் படிங்க: ஆகஸ்ட் மாதம் சூர்யா படத்துடன் போட்டிப் போடும் பிரபல நடிகர்களின் படங்கள் – லிஸ்ட் இதோ
வயது மூப்பு காரணமாக மறைவு:
நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது 85வது வயதில் காலமானார். தந்தையின் மறைவுக்குப் பிறகு, அஜித்தின் தாயார் மோகினி வயது மூப்பு சார்ந்த உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் தனது 84வது வயதில் இயற்கை எய்தினார். சுப்ரமணியம் – மோகினி தம்பதியருக்கு அனுப் குமார், அஜித்குமார், அனில் குமார் என மூன்று மகன்கள் உள்ளனர். கொல்கத்தாவைப் பூர்வீகமாகக் கொண்ட சிந்தி சமூகத்தைச் சேர்ந்தவரான மோகினி, தன் கணவர் சுப்ரமணியத்துடன் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மிக நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாயில் இருந்து சென்னை வரும் அஜித்:
அஜித்குமார் தனது ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து, அடுத்தகட்ட பணிகளுக்காகவும், தனிப்பட்ட பயணமாகவும் துபாயில் தங்கியிருந்த சூழலில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாயாரின் மறைவுச் செய்தி அறிந்தவுடன் அவர் அதிர்ச்சியடைந்து, துபாயில் இருந்து அவசரமாகச் சென்னைக்குப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்.
இதையும் படிக்க: Karuppu: சூர்யாவின் கெரியரிலே அதிக வசூல்.. உலகமெங்கும் 15 நாட்களில் கருப்பு படம் வசூல் இத்தனை கோடியா?
திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல்:
அஜித்தின் தாயார் மோகினியின் மறைவுச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் அஜித்தின் குடும்பத்தினருக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, தந்தை மறைவின்போது அஜித்தின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவரது இறுதிச் சடங்கு நிகழ்வு மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் எளிய தனிநிகழ்வாகவே நடந்தது. தாயாரின் இறுதிச்சடங்கும் தற்போது அதேபோலவே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.