காங்கிரஸ் கோட்டையாக திகழும் காரைக்குடி.. களமிறங்கும் முடிவில் சீமான்.. வெற்றிக்கு வித்திடுமா அரசியல் வியூகம்!
Seeman Contest Karaikudi Constituency: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் இருந்து மாறி காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்கு என்ன காரணம். அப்படி போட்டியிட்டால் அவருக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடக்கூடிய 234 வாக்காளர்களையும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இதில், சீமான் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வட சென்னை திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிட்டிருந்தார். தற்போது, அவர் தனது விருப்பத்தை காரைக்குடிக்கு மாற்றியிருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்தது. சீமானின் தொகுதி மாற்றம் ஒரு அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால், காரைக்குடி சட்டமன்ற தொகுதியானது செட்டிநாடு கலாச்சாரத்துக்கும், மண் சார்ந்த அரசியலுக்கும் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கும் தொகுதியாகும். தென் மாவட்டங்களில் சீமானுக்கு கிடைக்கும் ஆதரவை வாக்குகளாக மாற்றுவதற்கு காரைக்குடி முக்கிய பங்கு வகிக்கும் என்று அந்த கட்சியினர் எண்ணுகின்றனர்.
காங்கிரஸின் கோட்டையாக விளங்கும் காரைக்குடி
இத்துடன், தேசிய கட்சியான காங்கிரசின் கோட்டையாக காரைக்குடி சட்டமன்ற தொகுதி விளங்கிவரும் நிலையில், அங்கு தேசிய கட்சிக்கு எதிராக தனியாக களம் இறங்கி தனது வலிமையை நிரூபிப்பதற்கு சீமானுக்கு சரியான களம் என்றும் கட்சியினர் நம்புகின்றனர். கடந்த தேர்தல்களின் போது, காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு சீரான வாக்கு சதவீதம் தொடர்ந்து இருந்து வருகிறது. அதன்படி, கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவீதம் 2.65- ஆக இருந்த நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் 11.24 சதவீதமாக உயர்ந்து 4- ஆம் இடத்தை பிடித்தது.
மேலும் படிக்க: வேலூர் தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டம் – கடைசி நேரத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு




சீமானுக்கு வாக்கு வங்கி அதிகரிக்க வாய்ப்பு
அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாங்குடி 75 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், 2- ஆவது இடத்தை ஹெச். ராஜா பிடித்திருந்தார். தற்போது, சீமான் போன்ற ஒரு ஆளுமை நேரடியாக களமிறங்கும் போது, இந்த வாக்கு வங்கி பல மடங்கு அதிகரிக்கும் என்று கட்சியினர் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016- தேர்தலில் கடலூர் தொகுதியில் சீமானின் தனியான தேர்தல் பயணத்தில் 12,497 வாக்குகளும், 2021 தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் 45,597 வாக்குகளும் பெற்று 3- ஆம் இடம் பிடித்தார்.
நாம் தமிழர் கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி
இதனால், ஒவ்வொரு தேர்தலிலும் அவருக்கான வாக்கு சதவீதம் ஏறுமுகமாகவே உள்ளது. தற்போது, விஜயின் வருகையால் தேர்தல் களம் 4 முனை போட்டிக்கு மாறியுள்ள நிலையில், வாக்குகள் சிதறும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், சீமானுக்கு வெற்றி வாய்ப்பை அளிக்கக்கூடியதாக எதிர் பார்க்கப்படும் காரைக்குடி தொகுதியில் பெரும் வெற்றி அல்லது வாக்குகளின் எண்ணிக்கை அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாகவே பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: விசில் அடிக்காவிட்டால் உதைப்பேன் – தவெக நிர்வாகியின் பேச்சால் பரபரப்பு