நாதக வேட்பாளராக களமிறங்கும் வீரப்பன் மகள் வித்யாராணி… மேட்டூர் தொகுதியில் போட்டியிடுகிறார்!
NTK Candidate Vidyarani Veerappan: நாம் தமிழர் கட்சி சார்பில் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் தொகுதியில் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி வீரப்பன் போட்டியிட உள்ளார். நேற்று நடைபெற்ற நாதக மாநில மாநாட்டில் இதற்கான அறிவிப்பை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்.

நாதக சார்பில் மேட்டூர் தொகுதியில் வித்யாராணி வீரப்பன் போட்டி
திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாடு நேற்று சனிக்கிழமை ( பிப்ரவரி 21) நடைபெற்றது. இந்த மாநாட்டில் வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். இதில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சரிசமமாக வாய்ப்பு வழங்குவதற்காக மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 117 தொகுதிகளுக்கு ஆண் வேட்பாளர்களும், மீதம் உள்ள 117 தொகுதிகளுக்கு பெண் வேட்பாளர்களும் என வேட்பாளர்களை அறிவித்திருந்தார். இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதே போல, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிகள் திரைப்பட தயாரிப்பாளரும், பொறியாளருமான சோழன் மு. களஞ்சியம் வேட்பாளராக களமிறங்க உள்ளார்.
மேட்டூர் தொகுதியில் சந்தன கடத்தல் வீரப்பன் மகள் போட்டி
இதில், நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ள சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி வீரப்பன் சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக களம் காண உள்ளார். வழக்கறிஞரான வித்யாராணி வீரப்பன் ஆரம்பகால அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்து அரசியல் பணியில் ஈடுபட்டு வந்தார். பின்னர், சில காரணங்களுக்காக அந்த கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அங்கு, அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஓபிசி அணியின் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: பரிதாபமான நிலையில் தவெக.. திமுக – தேமுதிக கொள்ளை அடிப்பதற்கான கூட்டணி.. ராஜேந்திர பாலாஜி..
நாதக இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக வித்யாராணி வீரப்பன் பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும் விலகினார். இதை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரை நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக சீமான் நியமித்து உத்தரவிட்டார். தற்போது, அவர் நாம் தமிழர் கட்சியில் அரசியல் பணி ஆற்றி வருகிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கிருஷ்ணகிரி தொகுதியில் களமிறக்கப்பட்டார். ஆனால், அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவி இருந்தார்.
வெற்றிக்கான சைகையை புரிந்த வித்யாராணி
இந்த நிலையில், வருகிற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சேலம் மாவட்டத்தில் மேட்டூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். நாதக மாநாட்டில் சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதியில் வீரப்பனின் மகள் வித்யாராணி வீரப்பன் போட்டியிடுவதாக சீமான் அறிவித்த போது, அவர் தனது கையை தூக்கி வெற்றியை காண்பிக்கும் விதமாக சைகை புரிந்தார். அப்போது கட்சியினர் அவருக்கு உற்சாகம் கூக்குரலிட்டு ஆரவாரம் எழுப்பினர்.
மேலும் படிக்க: வழக்கு போடுவியா? போடு நாங்கள் பார்க்காத மிசாவா? மதுரையில் மு.க.ஸ்டாலின் பேச்சு