உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிப்பது எவ்வளவு ஈனமான செயல் – சரத்குமார் காட்டம்..
இணையத்தில் வெளியான விவகாரம் குறித்து பேசிய அவர், “ஹார்ட் டிஸ்க் தயாரிப்பாளரிடம் தான் உள்ளது. இதில் எப்படி சிபிஐ அதிகாரி குமரகுருபரனுக்கு தொடர்பு இருக்கும்? இது தேவையில்லாமல் அரசியலாக்கப்படுகிறது. எங்களது படத்திற்கும் இதே நிலை ஏற்பட்டபோது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க சொல்லியிருந்தோம்; அதுதான் சரியான முறை,” என தெரிவித்தார்.
சென்னை, ஏப்ரல் 13, 2026: கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உறவினர்களை வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிப்பது எவ்வளவு ஈனமான செயல் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் கடுமையாக விமர்சித்தார். கூட்டணியில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமார் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
விஜய் செய்தது மிகவும் ஈனமான செயல்..
அப்போது பேசிய அவர், “நாங்கள் 1996 முதல் மக்களை சந்தித்து வருகிறோம். ஒரு அசம்பாவிதம் கூட இதுவரை நடைபெறவில்லை. ஆனால் விஜயின் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறாமல், வீட்டிற்கு வரவழைத்து துக்கம் விசாரிப்பது எவ்வளவு ஈனமான செயல்? இதைவிட ஈனமான செயல் இருக்குமா?
மேலும் படிக்க: குஷியில் மாணவர்கள்.. பள்ளிகளுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி விடுமுறை..
துக்க வீட்டிற்கு சென்ற இடத்தில் செல்பி எடுக்கக் கூடாது என்பதையும் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாதவர் எப்படி எதிர்கால தலைவர்?” என கேள்வி எழுப்பினார்.
விஜய்யிடம் என்ன திட்டம் இருக்கிறது?
“இலவசங்களை எதிர்ப்பேன் என்று கூறியவர், தற்போது கார், பைக் வழங்குவேன் என கூறுகிறார். 10 லட்சம் கோடி கடனை சமாளிக்க அவரிடம் என்ன திட்டம் உள்ளது? சிதம்பரம் குடும்பத்திற்காக காங்கிரஸ் கட்சியை திமுகவினர் அடமானம் வைத்து விட்டனர். சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோதுதான் உதயநிதி வீட்டில் சிபிஐ ரெய்டு நடந்தது என்பதை மறக்கக் கூடாது,” என்றார்.
இணையத்தில் வெளியான விவகாரம் குறித்து பேசிய அவர், “ஹார்ட் டிஸ்க் தயாரிப்பாளரிடம் தான் உள்ளது. இதில் எப்படி சிபிஐ அதிகாரி குமரகுருபரனுக்கு தொடர்பு இருக்கும்? இது தேவையில்லாமல் அரசியலாக்கப்படுகிறது. எங்களது படத்திற்கும் இதே நிலை ஏற்பட்டபோது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க சொல்லியிருந்தோம்; அதுதான் சரியான முறை,” என தெரிவித்தார்.
மீண்டும் ஊட்டியில் கைக்கட்டி நிற்கும் நிலை ஏற்படக்கூடாது:
விஜய் அதிமுகவை விமர்சிக்காதது குறித்து பேசுகையில், “எப்படியாக இருந்தாலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அபார வெற்றி பெறுவார் என்பது விஜய்க்கு தெரியும். அதனால் தான் தேவையில்லாமல் பேசாமல் இருக்கிறார். மீண்டும் ஊட்டியில் கைகட்டி நிற்க வேண்டிய நிலை வரக்கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார் போல,” என கிண்டலாக பேசினார். பிரச்சாரத்தை முடித்த சரத்குமார், டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தபடி பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார்.
13 சதவீத வாக்குறுதிகள் கூட நிறைவேற்றாத திமுக அரசு:
அதனை தொடர்ந்து பேசிய திலகபாமா, “ 2021ம் ஆண்டில் திமுகவிடம் ஆட்சியை கொண்டுபோய் கொடுத்துவிட்டோம். எப்படியோ அவர்கள் ஜெயித்து வந்துவிட்டார்கள். வந்தவர்கள் 505 வாக்குறுதிகளை கொடுத்தனர். அதில் 13 சதவிகிதம் அதாவது வெறும் 63 வாக்குறுதிகளை மட்டுமே நிறை வேற்றியுள்ளனர். 13 மார்க் எடுத்தால் பாஸா? ஃ பெயிலா? ஃபெயிலான இந்த அரசாங்கம் நமக்கு வேண்டுமா? வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக செலவழித்து படிக்கிறோம். ஆனால் அரசு வேலைக்கு சென்றவர்கள் நிலை என்ன?
செவிலியர்கள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், மருத்துவர்கள் போராட்டம், எல்லாருமே போராடி தான் உரிமைகளை வாங்க வேண்டுமானால் அரசாங்கம் எதற்கு? இந்த பகுதியிலிருந்து வென்று வந்த எம்.எல்.ஏ ., எதையும் செய்யவில்லை. ஆனால் இப்போது வந்து வாக்குறுதிகளை அடுக்குகிறார். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு டாஸ்மாக் கடையை அடைக்க காவல்துறையை அணுகினேன் மூடினார்கள். கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்தி கொடுத்து, 5 ஆண்டுகள் உங்களுக்காக பணியாற்றிட வாய்ப்பு தாருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.