விஜய் மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தில் மீண்டும் மாற்றம்.. அக். 4ஆம் தேதி எந்த மாவட்டத்தில் சுற்றுப்பயணம்?
TVK Vijay Campaign: அக்டோபர் 4, 2025 அன்று திட்டமிடப்பட்டிருந்த சுற்றுப்பயணத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலில் அந்த தேதியில் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் விஜய்.

சென்னை, செப்டம்பர் 23, 2025: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் சுற்றுப்பயணத்தில் மீண்டும் ஒருமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரவிருக்கும் அக்டோபர் 4, 2025 அன்று வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக வெற்றிக்கழகம் அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழக வெற்றிக்கழகத்தைப் பொறுத்தவரையில், இது அதன் முதல் தேர்தல் என்பதால், கட்சி ஆயத்தமாகி வருகிறது. இதற்குமுன்பு பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்கள், மாவட்ட செயலாளர் கூட்டம், கட்சி மாநாடு போன்ற அடுத்தகட்ட பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன.
த.வெ.க தலைவர் விஜய் சுற்றுப்பயணம்:
இந்த சூழலில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், செப்டம்பர் 13, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் தோறும் மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். செப்டம்பர் 13, 2025 அன்று திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அன்றைய தினம் திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மக்களை சந்தித்து உரையாற்றினார்.
மேலும் படிக்க: உஷார்.. தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றவருக்கு நேர்ந்த சோகம்.. பறிபோன உயிர்!
தொடர்ந்து, செப்டம்பர் 20, 2025 அன்று நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உரையாற்றினார். பிரச்சார உரைகளின் போது அவர் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்தும் பேசிவருகிறார்.
சுற்றுப்பயணத்தில் மீண்டும் மாற்றம்:
இதற்கிடையில், வரவிருக்கும் செப்டம்பர் 27, 2025 அன்று முதலில் வடசென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் பிரச்சாரம் நடத்த திட்டமிடப்பட்டது.
மேலும் படிக்க: ஜே.பி நட்டாவை சந்தித்து இதுதான் பேசினேன்.. நயினார் நாகேந்திரன் சொன்னது என்ன?
பின்னர் அதிலும் மாற்றம் செய்து, சேலம் மாவட்டத்திற்கு பதிலாக கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாவட்ட கண்காணிப்பாளரிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, செப்டம்பர் 27, 2025 அன்று காலை 11 மணிக்கு நாமக்கல் மாவட்டத்திலும், மாலை 3 மணிக்கு கரூர் மாவட்டத்திலும் விஜய் உரையாற்ற உள்ளார்.
இதேபோல, அக்டோபர் 4, 2025 அன்று திட்டமிடப்பட்டிருந்த சுற்றுப்பயணத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலில் அந்த தேதியில் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதன் பதிலாக, அக்டோபர் 4, 2025 அன்று வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. புதிய பயணத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.