“வேல்முருகன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவார்”.. திமுக கொடுத்த விளக்கம்!!
Tamil Nadu Assembly Election: திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியேறியதும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தவாக இணையப் போவதாகத் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் கூறும்போது, "என்டிஏ (NDA) கூட்டணியில் ஒருபோதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெறாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
Tamil Nadu Polls 2026: தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூட்டணியை விட்டு வெளியேறியதாக எங்களுக்கு இன்னும் முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை. அவரும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவார்” – திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். முன்னதாக, திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி (தவாக) வெளியேறுவதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்திருந்தார். இருப்பினும், இது குறித்து திமுக தரப்பில் இருந்து முக்கிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தங்கள் கூட்டணியில் எந்த கட்சியையும் விட்டுவிடக்கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ள நிலையில், வேல்முருகனுடன் முறையாக பேச்சுவார்த்தை நடக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிக்க: கடந்த தேர்தலை விட குறைவான தொகுதிகளில் திமுக போட்டி?.. கூட்டணி கட்சிகளுக்காக தியாகம்.. பின்னால் பலே வியூகம்!!
நிபந்தனைகளும், அதிருப்தியும்:
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, பண்ருட்டி தொகுதியில் வேல்முருகன் வெற்றி பெற்றார். இந்த முறை நடைபெறும் தேர்தலில், தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும், தங்களுக்குக் குறைந்தது 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வந்தார். திமுகவின் தேர்தல் அறிக்கையில் பின்வரும் கோரிக்கைகளைச் சேர்க்க வேண்டும் என வேல்முருகன் நிபந்தனை விதித்திருந்தார். அதன்படி, வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு, தமிழக அரசுப் பணிகளில் 100 சதவீதம் தமிழர்களுக்கே முன்னுரிமை, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் விடுத்திருந்தார்.
ஆனால், திமுக தரப்பில் மீண்டும் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்ததால், வேல்முருகன் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில், மார்ச் 22 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியேறுவதாக வேல்முருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கட்சி அலுவலகம் முன்பு தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
யூகங்களுக்கு முற்றுப்புள்ளி:
இதைத்தொடர்ந்து, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தவாக இணையப் போவதாகத் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் கூறும்போது, “என்டிஏ (NDA) கூட்டணியில் ஒருபோதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெறாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதோடு, விஜய்யின் தவெகவிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கூட்டணி அமைக்காது என்று கூறினார்.
இதையும் படிக்க: “டாப் கியரில் நாதக”.. முதல்கட்ட தேர்தல் சுற்றுப்பயணம்.. நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார் சீமான்..
டி.கே.எஸ். இளங்கோவன் விளக்கம்:
இந்நிலையில், தவாகவின் வெளியேற்றம் குறித்து திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தமிழக வாழ்வுரிமைக் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக எங்களுக்கு இன்னும் முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை. பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் வரத் தயாராக இருப்பதாகத் தான் எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். அவரும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.