அங்கீகரிக்கப்படாத கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களுக்கு இன்று சின்னம் அறிவிப்பு.. குலுக்கல் முறையில் ஒதுக்கீடு..
Tamilnadu Assembly Polls: சில அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் குறிப்பிட்ட சின்னங்களை பெற்றிருந்தால், அந்த சின்னங்களை தேர்தல் நடத்தும் அதிகாரி அனுமதிப்பார். ஆனால் சின்னங்களை பெறாத அது போன்ற கட்சிகள் இருந்தால், அவர்கள் என்னென்ன பொதுச்சின்னங்களை வேட்புமனுவில் கேட்டுள்ளனர் என்று அதிகாரி ஆய்வு செய்வார்.
Tamilnadu Polls 2026: தமிழகத்தில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு இன்று குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு புறம் நடக்கும் நிலையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து, வேட்புமனு பரிசீலனையும் முடிவடைந்துள்ளது.
இதையும் படிக்க: தலைமை செயலாளர் மாற்றம்.. தேர்தல் ஆணையத்தை சாடிய முதல்வர் ஸ்டாலின்..
5,081 வேட்புமனுக்கள் ஏற்பு:
இறுதியாக தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 7,599 மனுக்களில் 5,081 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் நேற்று பிற்பகல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 2,480 மனுக்கள், சரியான ஆவணங்கள் தாக்கல் செய்யாத காரணத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. 38 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டது
சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கீடு:
இந்நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று (ஏப்.9) கடைசி நாளாகும். அந்தவகையில், இன்று காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். அதன்பிறகு வேட்புமனுவை திரும்பப் பெற முடியாது. அதன்பிறகு தேர்தல் சின்னங்களை ஒதுக்கும் பணி தொடங்கும். அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களை தேர்தல் நடத்தும் அதிகாரி ஒதுக்குவார்.
முன்னுரிமை அடிப்படையில் சின்னம்:
சில அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் குறிப்பிட்ட சின்னங்களை பெற்றிருந்தால், அந்த சின்னங்களை தேர்தல் நடத்தும் அதிகாரி அனுமதிப்பார். ஆனால் சின்னங்களை பெறாத அது போன்ற கட்சிகள் இருந்தால், அவர்கள் என்னென்ன பொதுச்சின்னங்களை வேட்புமனுவில் கேட்டுள்ளனர் (3 முன்னுரிமைகள்) என்று அதிகாரி ஆய்வு செய்வார். முன்னுரிமையில், கேட்ட சின்னங்களை அந்தந்த கட்சிகளுக்கு அதிகாரி ஒதுக்கி உத்தரவிடுவார். ஆனால் அதே சின்னத்தை வேறு கட்சிகள் தங்களின் முன்னுரிமையில் கேட்கவில்லை என்றால்தான் அந்த சின்னத்தை அவரால் ஒதுக்க முடியும்.
இதையும் படிக்க: தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றம்.. தேர்தல் ஆணையம் அதிரடி..
குலுக்கல் முறையில் சின்னம்:
ஆனால் ஒரே பொதுச்சின்னத்தை வேறு கட்சிகள் கேட்டிருந்தால், அது குலுக்கல் முறையில் முடிவு செய்யப்படும். இதற்காக சீட்டில் வேட்பாளரின் வரிசை எண் அல்லது பெயரை எழுதி, குலுக்கிப் போட்டு, சீட்டை தேர்தல் நடத்தும் அதிகாரி எடுப்பார். யார் பெயருக்கு சீட்டு விழுகிறதோ, அவருக்கு அந்த சின்னம் ஒதுக்கப்படும். மொத்தம் 184 பொதுச் சின்னங்களை தேர்தல் கமிஷன் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.