Nainar Nagendran: ஓபிஎஸ் அணியை சமாதானம் செய்ய முயற்சி? – நயினார் நாகேந்திரன் பதில்!
ஓ. பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் விருப்பப்பட்டால் மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியுள்ளார். இதனால் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரன் - ஓ.பன்னீர்செல்வம்
மதுரை, ஆகஸ்ட் 1: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகுவதாக அறிவித்த நிலையில் அது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி இந்த முறை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.
அதேபோல் அதிமுக – பாஜக கூட்டணியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகம் கூட்டணிக்கான கதவை திறந்து வைத்துள்ளது. தேசிய முற்போக்கு திராவிட கழகம் தங்களது நிலைப்பாட்டை 2026 ஜனவரி மாதத்தில் நடைபெறும் மாநாட்டில் தெரிவிப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. தேர்தல் களம் கடைசிவரை பரபரப்பாகவே இருக்கும் என்பதால் இந்த முறை கூட்டணி மாறுமா?, மக்களின் மனநிலை என்னவாக இருக்கும் என இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
வெளியேறிய ஓபிஎஸ்
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், “தொண்டர்கள் உரிமை மீட்பு குழு” என்ற அமைப்பை தொடங்கி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்தனர். அதிமுகவில் மீண்டும் சேர்வது, பிரிந்த அதிமுகவை ஒன்றிணைப்பது என பலமுறை கோரிக்கை விடுத்தும் அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு சம்மதிப்பதாக தெரியவில்லை. மத்தியில் உள்ள பாஜக இதில் தலையிட்டு சமரசம் செய்யும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
Also Read: அதிமுக ஆட்சியில் அனைத்து ஊழலும் விசாரிக்கப்படும் – காரைக்குடியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு..
ஆனால் கூட்டணி தொடர்பான அறிவிப்பின்போது அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்து விட்டு சென்றார். இந்த நிலையில் கடந்த வாரம் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்த போது அவரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் எவ்வளவோ கேட்டும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்த ஓபிஎஸ் தரப்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தடாலடியாக அறிவித்தது.
மேலும் அரசியல் சூழலை கருத்தில் கொண்டு யாருடன் கூட்டணி அமைப்போம் எனவும் விரைவில் தெரிவிக்கிறோம் என கூறியிருந்தனர். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் திடீரென நேற்று (ஜூலை 31) காலை, மாலை மற்றும் இன்று (ஆகஸ்ட் 1) காலை என மூன்று நேரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது அரசியல் உலகில் பேசு பொருளாக மாறி உள்ளது.
சமாதானம் செய்ய பாஜக முயற்சி
இப்படியான நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சமரசம் செய்ய பாஜக முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனிடையே மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ஓபிஎஸ் அணி விலகல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியோர்களுக்கு முன்பு அவரிடம் பலமுறை பேசினேன். எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என தெரிவித்தேன். ஆனால் அவர் கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளார். இதற்கு சொந்த பிரச்சனையா அல்லது வேறு எதுவும் காரணமா என தெரியவில்லை.
இது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் ஓபிஎஸ் என்னிடம் கேட்டிருந்தால் நான் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன். இப்போதும் அவர் கேட்டுக் கொண்டால் ஆகஸ்ட் 26ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன்” என கூறியுள்ளார்.