O Panneerselvam: பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகல்..
OPS -NDA Alliance: பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து விலகி விட்டோம் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி ஓபிஎஸ் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஓ.பன்னீர்செல்வம் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை, ஜூலை 31: பாரதிய ஜனதா கட்சியின் (BJP) கூட்டணியில் இருந்து விலகி விட்டோம் என ஓ.பன்னீர்செல்வம் (O. Panneerselvam) தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் (Panruti S. Ramachandran) தெரிவித்துள்ளார். இன்று அதாவது 2025 ஜூலை 31ம் தேதி நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் உயர்நிலை குழு கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. எதிர்காலத்தில் அரசியல் சூழல் கருதி எந்த கட்சியுடன் கூட்டணி சேர்வோம் என்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் எனவும் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி:
சென்னையில் இன்று அதாவது 2025 ஜூலை 31ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்தனர். இதுகுறித்து பண்ருட்டி ராமச்சந்திரன், “முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசியல் நிலைமை குறித்தும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து உறவை முறித்து கொள்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான காரணத்தை நாடே அறியும். 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஓ.பன்னீர் செல்வம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சென்று, மக்களையும், தொண்டர்களையும் சந்திப்பார்.
ALSO READ: பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறாரா? நாளை அறிவிக்கும் ஓபிஎஸ்!
தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. பாஜக கூட்டணியில் இனி ஒருபோதும் இடம்பெறமாட்டோம். எதிர்காலத்தில் நிலைமையை பொறுத்து எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை முடிவெடுப்போம்.” என்றார்.
தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது குறித்து பதிலளித்த ஓபிஎஸ், “நான் நடைபயிற்சி செல்லும்போது முதலமைச்சரும் நடைபயிற்சியில் இருந்ததால் வணக்கம் தெரிவித்துவிட்டு சென்றேன்” என தெரிவித்தார்.
ALSO READ: 1967,1977 போல 2026 சட்டப்பேரவை தேர்தலா? விஜயின் கருத்துக்கு திருமாவளவன் பதில்!
ஓபிஎஸ் அணி விலகுவதற்கான காரணம் என்ன..?
ஓபிஎஸ் அணி இடம்பெற்றிருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் சமீபத்தில் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி அமைத்தது. மேலும், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருப்பார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே, அதிமுகவும், அந்த கட்சியின் சின்னமாக இரட்டை இலையும் யாருக்கு சொந்தம் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இடையே வழக்கு நடந்தது. அதில், தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உத்தரவுகள் வர, ஓபிஎஸ் அணி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களை சேர்த்து மீண்டும் அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் களமிறங்குகிறது. இதன் காரணமாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுகவுடன் இணைந்து செயல்பட முடியாது என்பதால், ஓபிஎஸ் அணி அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.