தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு… கடைசியில் ஒரு ட்விஸ்ட்!
Tamil Maanila Congress: தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் ஜி. கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளில் அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
தமிழகத்தில் ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுக்கான கூட்டணியை தேர்வு செய்ததுடன், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றின் தீவிரமாக இறங்கி பணியாற்றி வருகின்றன. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிகள் பங்கீடு செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், வேட்பு மனு தாக்கலுக்கான தேதி நெருங்கி வந்ததையடுத்து, சில நாட்களுக்கு முன்பு தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டன. அதில், பாரதிய ஜனதா கட்சிக்கு 27 சட்டமன்றத் தொகுதிகள், பாட்டாளி மக்கள் கட்சிக்கு ( அன்புமணி தரப்பு) 18 சட்டமன்ற தொகுதிகள், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 11 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், தமிழ் மாநில காங்கிரஸ் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வரை எதிர்ப்பார்த்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜி.கே.வாசன் அதிருப்தி
அதிலும், குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் பலத்தை ஜி.கே.வாசன் முன் வைத்து பேசியிருந்தார். இருந்தாலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதில் பெரும் இழுபறி நீடித்து வந்தது. மேலும், தமாகா கேட்ட தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி ஒதுக்கீடு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் பங்கேற்கவில்லை. இதனால், ஜி. கே. வாசன் அதிருப்தியில் இருப்பதாக பேசப்பட்டது.
மேலும் படிக்க: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள்
இந்த நிலையில், பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயலை சந்தித்ததுடன், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாகவும், அந்த கூட்டணி ஒதுக்கும் தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு இருப்பதாகவும் ஜி. கே. வாசன் அறிக்கை மூலம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தமிழ் மாநில காங்கிரசுக்கு 5 சட்டமன்ற தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் அவரை, ஜி. கே. வாசன் சந்தித்து பேசி இருந்தார். இதை தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு,
- ஒட்டன்சத்திரம்.
- ராணிப்பேட்டை.
- ஈரோடு மேற்கு.
- கும்பகோணம்
- கிள்ளியூர்.
ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளை அதிமுக தலைமை ஒதுக்கீடு செய்துள்ளது. அதே வேளையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளிலும் அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், தமாகா சின்னத்தில் போட்டியிட முடியாது. இதன் மூலம், தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடித்து வந்த இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
மேலும் படிக்க: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விருப்பம் இல்லை.. தேர்தலில் போட்டியில்லை.. கமல்ஹாசன் அதிரடி..