சூடு பிடிக்கும் தேர்தல் களம்… பல்வேறு வண்ணங்களில் தீவிரமாக தயாராகும் கட்சி கொடிகள்!
Tamil Nadu Assembly Elections : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கான கொடிகள் தயார் செய்யும் பணி திருப்பூரில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளில் தொழிலாளர்கள் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர் .

திருப்பூரில் கட்சி கொடிகள் தயார் செய்யும் பணி தீவிரம்
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மத்தியில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அரசியல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் கிட்டத்தட்ட கூட்டணி இறுதியாகிவிட்ட நிலையில், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு வகையான அதிரடி அறிவிப்புகளை கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. மேலும், சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் முன்பே, பொதுக்கூட்டங்கள் மற்றும் மாநாடு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஆகியவற்றை அனைத்துக் கட்சிகளும் மேற்கொண்டு தங்களுக்கான தேர்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதனால், தமிழகத்தில் தேர்தல் களம் படு பிஸியாக உள்ளது. இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அனைத்துக் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தில் அதிரடியாக களம் இறங்குவர்.
திருப்பூரில் கட்சி கொடிகள் தயார் செய்யும் பணி
அவ்வாறு பிரச்சாரம் மேற்கொள்ளும் அரசியல் கட்சியினர் தங்களுக்கான கட்சியின் கொடிகளை வாகனங்களில் பறக்க விட்டவாறு வருவர். இதேபோல, பல்வேறு ஊர்களில் முக்கிய இடங்களில் இருக்கும் தங்களுக்கான கட்சி கொடி கம்பங்களை கட்சியின் கொடியை ஏற்றி வைத்து தங்களது பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள். இதற்காக, ஏராளமான கட்சி கொடிகள் தேவைப்படும் என்பதால் திருப்பூரில் கட்சி கொடிகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான கட்சியினர் திருப்பூரை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்யும்போது வருத்தமாக இருந்தது – பிரதமர் மோடி வேதனை
அரசியல் கட்சி கொடிகளுக்கான தேவை அதிகரிப்பு
அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை முடிவதற்கு முன்பாகவும், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவும் கட்சி கொடிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதற்காக திருப்பூரில் தொழிலாளர்கள் இரவு, பகலாக கட்சி கொடிகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில், சிறிய அளவிலான கையடக்க கொடிகள் முதல், மாநாடு மற்றும் பொதுக்கூட்டத்தில் பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான கொடிகள் வரை தயார் செய்யப்பட்டு வருகின்றன.
சூரத்தில் இருந்து கட்சி கொடிகளை இறக்குமதி செய்ய திட்டம்
தற்போதே, அரசியல் கட்சிகளுக்கான கொடிகளுக்கு முன்பதிவு அதிகமாக கிடைத்து இருப்பதால், கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவை இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட பின்னரும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் மேலும் அதிகமாக கட்சிகளின் கொடிகள் தேவைப்படும் என்பதால் அதனையும் முன்கூட்டியே தயார் செய்து இருப்பு வைக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மேலும் அரசியல் கட்சிகளின் கொடிகள் தேவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் குஜராத் மாநிலம், சூரத்தில் இருந்து அரசியல் கட்சி கொடிகளை இறக்குமதி செய்து வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் படிக்க: திமுக அளிக்கும் 25 இடங்களை ஏற்ககூடியது அல்ல… கிரிஷ் சோடங்கரின் பேச்சால் பரபரப்பு