பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்…தயார் நிலையில் பிரம்மாண்ட மேடை…கழுகு பார்வையில் 5 ஆயிரம் போலீசார்!
Madurantakam NDA Alliance Meeting: மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டத்துக்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி எஸ்பிஜி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதுடன், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடை
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை (ஜனவரி 23) நடைபெற உள்ளது. இந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சித் தலைவர்களையும் மேடை ஏற்றி உரையாற்ற வைப்பதுடன், கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் இருந்து தனி விமான மூலம், சென்னை பழைய விமான நிலையத்துக்கு இன்று மதியம் வந்தடைகிறார். அங்கிருந்து, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் மதுராந்தகம் பகுதிக்கு பிற்பகல் 3 மணியளவில் வருகை தர உள்ளார். இதைத் தொடர்ந்து, பிற்பகல் 3 மணி முதல் 4:30 மணி வரை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
மதுராந்தகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடை
இந்த பொதுக் கூட்டத்துக்காக பிரம்மாண்டமான மாநாட்டு மேடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த மேடையில் பிரதமர் மோடி ஒரு புறமும், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஒரு புறமும் கைகளை காண்பிப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அதன் நடுவில் கூட்டணி கட்சி தலைவர்களின் படங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: மக்கள் நீதி மய்யத்தின் கூடுதல் தொகுதிகள் கேட்கும் முடிவு?திமுவின் ஒற்றை இலக்க நிலைப்பாடு..கமலஹாசன் திட்டம் சாத்தியமாகுமா!
5 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள்
மேடையின் எதிர் திசையில் சுமார் 5 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள், அவர்களுக்கான கழிப்பறை வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதே போல, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுராந்தகம் பகுதியில் அதிமுக, பாஜக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. பொதுக் கூட்டத்துக்கான முன்னேற்பாடு பணிகளை முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார்
பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த பொதுக் கூட்டத்துக்கு வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தத்தில் தேசிய ஜனநாய கூட்டணி மாநாடு நடைபெறும் மதுராந்தகம் பகுதி சிறப்பு பாதுகாப்பு படை ( எஸ். பி. ஜி.) கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு எஸ்பிஜ-யின் இணை இயக்குநர் அமி சந்த் யாதவ் பாதுகாப்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.
மேலும் படிக்க: ஊழல் நிறைந்த திமுக அரசுக்கு விடை கொடுக்க தயாரான தமிழ்நாடு – பிரதமர் மோடி..