தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் காங்கிரஸ்?.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?..
Congress - TVK alliance talk: "தமிழ்நாடு 2026 தேர்தல்களுக்கு 'விசில்' ஊதப்பட்டுவிட்டது! அனைத்துக் கட்சிகளும் இப்போது புறப்படத் தயாராகிவிட்டன" என அகில இந்திய காங்கிரஸின் தரவுப் பகுப்பாய்வுப் பிரிவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி பதிவிட்டிருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை, ஜனவரி 23: காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் தங்களுடன் கூட்டணி அமைக்க விரும்பவதாக தவெக நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் திமுகவில் சேரப் போவதாகப் பரவும் தகவல் உண்மையல்ல என்று விளக்கமளித்தார். மேலும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா எதிர்த்த திமுகவில் சேருவது ஒருபோதும் நடக்காது. விஜய், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற ஒரு நல்ல தலைவர். அதனால்தான் தவெக தனக்கு சிறந்த தேர்வாக இருந்தது என்று கூறினார். மேலும், தவெக – கூட்டணி வாய்ப்புகள் குறித்தும் அவர் பேசியுள்ளார்.
இதையும் படிக்க : ஜன.25ல் மாமல்லபுரத்தில் தவெக செயல் வீரர்கள் கூட்டம்.. பங்கேற்கிறார் விஜய்..
முதல்வர் பதவியை ஏற்க மறுத்தேன்:
எனது அரசியல் பயணம் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், கூவத்தூர் சம்பவத்தின்போது, சசிகலா என்னை நேரில் அழைத்து முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டார். ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன். அதிமுகவை ஒன்றிணைப்பதற்காக மட்டுமே நான் முன்பு பாஜகவுடன் பேசினேன். ஆனால் எனது முயற்சி தோல்வியடைந்தது. எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதாவுக்கு அறிமுகப்படுத்தியதே நான்தான். நான் வளர்த்துவிட்ட ஒருவர் என்னை எப்படி நீக்கினார் என்று நினைத்து, தூங்காமல் இரண்டு நாட்கள் அழுதேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மனமுடைந்தார்.




தவெக திமுக ‘பி’ டீமா?
தொடர்ந்து, பேசிய அவர், தவெகவை திமுகவின் ‘பி’ டீம் என்று சொல்வதில் அர்த்தமில்லை. ஈரோடு பொதுக்கூட்டத்தில், விஜய் திமுகவை ஒரு தீய சக்தி என்று அறிவித்தார். விஜய்யின் கொள்கைகளைப் பற்றிக் கேட்பவர்களுக்கு, காஞ்சிபுரத்தில் விஜய் அறிவித்த திட்டங்களே பதிலளிக்கும். விஜய்க்கு 34 சதவீத வாக்குகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கூட்டணி வாய்ப்பு:
மேலும், காங்கிரஸ் கட்சி இரண்டு பிரிவுகளாகப் பிரிந்துள்ளது. அவர்கள் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று கணிக்க முடியாது. ஒரு பிரிவினர் எங்களுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறார்கள். அவர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிக்க : அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்த மேலும் சில கட்சிகள்.. பியூஷ் கோயல் வெளியிட்ட அறிவிப்பு..
‘விசில்’ ஊதப்பட்டுவிட்டது:
இதனிடையே, நேற்று சட்டமன்றத் தேர்தலையொட்டி, விஜய்யின் தவெகவுக்கு’விசில்’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை வரவேற்கும் வகையில், அகில இந்திய காங்கிரஸின் தரவுப் பகுப்பாய்வுப் பிரிவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில், “தமிழ்நாடு 2026 தேர்தல்களுக்கு ‘விசில்’ ஊதப்பட்டுவிட்டது! அனைத்துக் கட்சிகளும் இப்போது புறப்படத் தயாராகிவிட்டன” என்று பதிவிட்டிருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.