வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி…ஆனால் வனத்துறை வைத்த செக்…என்ன அது!
Velliangiri Mountain: வெள்ளியங்கிர மலை ஏறுவதற்கு பிப்ரவரி 1- ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மலை ஏறும் பக்தர்களுக்கு வனத்துறை மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்புக்காக மருத்துவக் குழு மற்றும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் உள்ள மலையில் பக்தர்கள் மலை ஏறுவது வழக்கமாகும். இந்த மலைக்கு அடர்ந்த காட்டுப்பகுதி வழியாகவும், மலை மீதும் நடந்து செல்ல வேண்டும். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மழை மற்றும் பனிப்பொழிவு அதிக அளவு இருந்ததால் வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு பாதுகாப்பு கருதி பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில், வெள்ளியங்கிரி மலை ஏறுவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், வருகிற பிப்ரவரி 1- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசம் முதல் வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்களுக்கு வனத்துறை சார்பில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பரிசோதனைக்கு பிறகே பக்தர் மலை ஏற அனுமதி
இது தொடர்பாக, கோவை மாவட்ட வன அதிகாரி ஒருவர் கூறுகையில், வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்கள் மிகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும். உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த காரணம் கொண்டும் மலை ஏறக்கூடாது. இருந்தாலும், பக்தர்களின் வசதிக்காக வெள்ளையங்கிரி மலை அடிவாரத்தில் அவசர ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருக்கும். மேலும், மருத்துவ குழுவினர் மூலம் பக்தர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் உடல் தகுதி உள்ள பக்தர்களுக்கு மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்படும். 3, 6, 7- ஆகிய மலையில் மருத்துவ முகாம் அமைக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க: பெளர்ணமி கிரிவலம்…திருவண்ணாமலைக்கு போறீங்களா…சிறப்பு ரயில் அறிவிப்பு!
மருத்துவக் குழுவுடன், வனத்துறை இணைந்து செயல்படும்
இந்த மருத்துவ முகாமில் மருத்துவ ஊழியர்களுடன் வனத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்படுவர். வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தில் வனத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் வீரர்கள் தயார் நிலையில் இருப்பர். மேலும், மலை மீது 8 பேர் கொண்ட குழு தொடர்ந்து ரோந்து பணி மேற்கொண்டு வரும். வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்கள் யாரும் போதை பொருட்களை உபயோகிக்க கூடாது. இதே போல, பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட எந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் மலை மீது கொண்டு செல்லக்கூடாது.
அசம்பாவிதங்களை தடுக்க கட்டுப்பாடுகள் தீவிரம்
மேலும், மலையின் அடிவாரத்தில் பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு அதில் பிளாஸ்டிக் கவரில் உணவுப் பொருட்கள் இருந்தால், அவை சாதாரண பேப்பருக்கு மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்படும். கடந்த ஆண்டு வெள்ளையங்கிரி மலை ஏறிய 9 பேர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். எனவே, இந்த ஆண்டு அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக கடுமையான நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த மலையில் மார்ச் முதல் மே மாதம் வரை மட்டுமே பல ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தைப்பூச திருவிழா..திருச்செந்தூர் முருகன் கோயிலில் பூஜை நேரங்கள் மாற்றம்!