லீமா ரோஸ் மார்ட்டினுக்கு அடித்தது “லக்”.. ஒரே வாரத்தில் அதிமுகவில் முக்கிய பொறுப்பு.. எடப்பாடி அறிவிப்பு!
Leema Rose Martin : இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகி அண்மையில் அதிமுக இணைந்த லாட்டரி அதிபரி மனைவியும், ஆதவ் அர்ஜூனாவின் மாமியாருமான லீமா ரோஸுக்கு மகளிர் இணை செயலாளர் பதவி அளித்து எடப்பாடி கே. பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

லீமா ரோஸ் மார்ட்டினுக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாட்டரி அதிபர் சாண்டியாகோ மாட்டினின் மனைவி லீமா ரோஸ். இவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் ஆவார். இவர், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியில் மாநில இணை பொதுச் செயலாளராக இருந்து வந்தார். கடந்த 14 ஆண்டுகளாக இந்திய ஜனநாயக கட்சியில் பணியாற்றி வந்த இவருக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கத்தில் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு லீமா ரோஸ் அறிவித்திருந்தார். அதன்படி, இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகியதுடன், கடந்த பிப்ரவரி 17- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை ) அதிமுகவில் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார்.
அதிமுகவில் லீமா ரோஸுக்கு முக்கிய பொறுப்பு
இந்த நிலையில், அதிமுகவில் லீமா ரோசுக்கு முக்கிய பொறுப்பு வழங்கி எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் அதிமுகவில் இணைந்த லீமா ரோஸுக்கு அதிமுகவின் மகளிர் அணி இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பொறுப்பில் லீமா ரோஸ் மார்ட்டின் இன்று புதன்கிழமை ( பிப்ரவரி 25) முதல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனவே, இவருக்கு அதிமுகவின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “ரூ.1,020 கோடி ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?”.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக சரமாரி கேள்வி!!
இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலக காரணம்
இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகியிருந்த போது, லீமா ரோஸ் வெளியிட் அறிக்கையில், இந்திய ஜனநாயக கட்சிக்கு நேரம், காலம் பார்க்காமல் உழைத்து வந்தேன். ஆனால், அந்த கட்சியின் தலைமை என் உழைப்பை அங்கீகரிக்கவில்லை. அத்துடன் எனது உழைப்பை உதாசீனப்படுத்தியது. இது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது என்று தெரிவித்திருந்தார். கட்சியில் இருந்து விலகுவதற்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, லீமா ரோஸ் சந்தித்திருந்தார்.
புதிய கட்சி தொடங்கிய லீமா ரோஸ் மகன்
இதனால், அவர் அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்தார். ஆனால், திடீரென இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகுவதாக கூறிவிட்டு, அதிமுவில் அதிரடியாக இணைந்தார். புதுச்சேரியில் லீமா ரோஸ் மார்ட்டினின் மகன் ஜோ சார்லஸ் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கி அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக ஜோ சார்லஸ் மற்றும் லீமா ரோஸ் பாஜகவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “திடீர் சாம்பார், திடீர் இட்லி போல் திடீர் கட்சிகள் வரலாம்”.. டிடிவி தினகரன் அட்டாக்!!