ஜெயலலிதாவுக்கு பிறகு நான் முதல்வராகி இருக்க வேண்டும்.. பரபரப்பை கிளப்பிய செங்கோட்டையன்!
KA Sengottaiyan: அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மறைவுக்கு பிறகு தமிழகத்தின் முதல்வராக நான் பதவி ஏற்றிருக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக்கக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். இது பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஜெயலலிதாவுக்கு பிறகு நான் முதல்வராகியிருக்க வேண்டும்
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சியின் தலைவர் விஜய் தொகுதிகள் வாரியாக பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார். அதன்படி, தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். தனது தொகுதியில், செங்கோட்டையன் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார். அதன்படி, இன்று செங்கோட்டையன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர் பேசியதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் டெல்டா விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாடு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராக எந்த திட்டமாக இருந்தாலும் அதற்கு தவெக முழு எதிர்ப்பை பதிவு செய்யும்.
குடிமை பொருள்கள் பாக்கெட்டில் வழங்கப்படும்
நியாயவிலை கடைகளில் அரிசியை தவிர்த்து மற்ற பொருட்கள் பாக்கெட்டில் அடைத்து விநியோகம் செய்யப்படும். 5 ஏக்கர் நிலத்துக்கு குறைவாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள வங்கி கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெற்ற வேளாண் வங்கி கடன் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, அதிமுகவின் பழைய கட்சி விவகாரங்கள் குறித்து செங்கோட்டையன் பேசியதாவது:
மேலும் படிக்க: ராகுல் காந்தி – மு.க.ஸ்டாலின் இணைந்து பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பில்லை.. ஆர்.எஸ்.பாரதி வைத்த அதிரடி ட்விஸ்ட்!
ஜெயலலிதாவுக்கு பிறகு நான் முதல்வராகியிருக்க வேண்டும்
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தின் முதல்வராக நான் பதவி ஏற்றிருக்க வேண்டும். ஆனால், கடைசி நேரத்தில் நான் ஏமாற்றம் அடைந்துவிட்டேன். அன்று இரவு வரை நான் தான் முதல்வர் ஆவதாக இருந்தது. ஆனால், மறுநாள் காலையில் காட்சிகள் மாறிவிட்டது. அந்த ஆள் கையில் பெட்டி இருந்தது. ஆனால், எனது கையில் பெட்டி இல்லை. காலையில் பார்த்தபோது சசிகலா என்னிடம் கேட்டார்கள். அப்போது, சரி பரவாயில்லை யாரோ ஒரு ஆள் முதல்வராக இருந்து விட்டுப் போகிறார்கள் என்று சசிகலா தெரிவித்தார்.
மலைப்பாம்பு போல காலில் விழுந்த எடப்பாடி
மேலும், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று சசிகலா என்னிடம் கேட்டார். அதற்கு, நான் அதிமுக என்ற மாபெரும் இயக்கம் உடையாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினேன். இதன் பின்னர், எடப்பாடி பழனிசாமியிடம் நீங்கள் தான் முதல்வர். செங்கோட்டையனும் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார். இனி கவலை இல்லை என்று எடப்பாடி பழனிசாமியின் தோளை சசிகலா தட்டி கொடுத்தார். உடனே, மலை பாம்பு போல சசிகலாவின் காலில், எடப்பாடி பழனிசாமி விழுந்து விட்டார் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: ரூ.10,000 ‘போலி செக்’.. தேர்தல் களத்தில் வெடிக்கும் பணப் புகார்களும், சட்டப் போராட்டங்களும்!!