Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திமுக கூட்டணியில் இணையுமா பாமக? ராமதாஸ் கொடுத்த விளக்கம்!

DMK PMK Alliance : 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து பாமக போட்டியிடுமா என்ற கேள்விக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார். அதாவது, திமுக கூட்டணியில் பாமக இணையுமா என்பதை செயற்குழு, பொதுக் குழு தான் முடிவு செய்யும் எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் இணையுமா பாமக? ராமதாஸ் கொடுத்த விளக்கம்!
ராமதாஸ் - மு.க.ஸ்டாலின்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 03 Jul 2025 15:01 PM

சென்னை, ஜூலை 03 : திமுகவுடன் கூட்டணி (DMK Alliance) பேசி வருவதாக வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தி என பாமக நிறுவனர் ராமதாஸ் (PMK Founder Ramadoss)  தெரிவித்துள்ளார். மேலும், பொதுக்குழு, செயற்குழு கூடி கூட்டணி குறித்து ஆலோசித்த பிறகு தான் முடிவு எடுக்கப்படும் எனவும் ராமதாஸ் தெரிவித்தள்ளார். பாமகவில் கடந்த சில மாதங்களாக உட்கட்சி பிரச்னை நிலவி வருகிறது. அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே அதிகார மோதல் நிலவி வருகிறது. இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நியமித்தும், நீக்கம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், பாமக தொண்டர்களிடையே குழப்பம் நீடித்து வருகிறது. இருவருக்கும் இடையேயான பிரச்னையை முடித்து வைக்க கட்சி மூத்த நிர்வாகிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக கூட்டணியில் இணையுமா பாமக?

அதே நேரத்தில், இருவரும் ஒருவரைக்கொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், திமுகவை அன்புமணி விமர்சித்து வரும் நிலையில் ராமதாஸ் ஸ்டாலினை புகழ்ந்து பேசி இருக்கிறார். இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ராமதாஸை அண்மையில் சந்தித்து பேசினார்.

இதனால், திமுக கூட்டணியில் பாமக இணையுமாக என்ற கேள்வி எழுந்தது. இப்படியான சூழலில், பாமக நிறுவனர் ராமதாஸ் 2025 ஜூலை 3ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் திமுக கூட்டணியில் பாஜக இணைய வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த ராமதாஸ், “திமுக கூட்டணியில் பாமக இணையுமா என்பதை செயற்குழு, பொதுக்குழு தான் முடிவு செய்யும். நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழு கூடி, எந்த கூட்டணியில் இணைய வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

ராமதாஸ் பேட்டி

அவர்களின் கருத்துகளை கேட்ட பிறகு முடிவு எடுக்க முடியும். இதுகுறித்து வெளியாகி வரும் செய்திகள் அனைத்து வதந்தி மட்டும் தான்” என கூறினார். தொடர்ந்து, அன்புமணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ், “அன்புமணி குறித்த கேள்விகளை தவிர்க்க வேண்டும்.

அந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை” என கூறினார். மேலும் பேசிய அவர், “பாமக எம்எல்ஏவை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. அவரை நீக்க வேண்டுமென்றால் பாமக நிறுவனர், தலைவராகிய நான் மட்டுமே நீக்க வேண்டும்.

பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜிகே மணி சபாநாயகருக்கு கடிதம் கொடுத்து தான் நீக்க முடியும்” எனவும் ராமதாஸ் கூறியுள்ளார். இப்படியே, இருவருக்கும் பிரச்சை நிலவி வருகிறது.  சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இருவருக்கும் இடையேயான மோதல், கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.