’தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி’ கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி பேச்சு
AIADMK BJP Alliance : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா கூறி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இதுபோன்று கூறியிருக்கிறார்.

சென்னை, ஜூன் 30 : தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் (Tamil Nadu Assembly Polls) அதிமுக அதிக இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy) திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த வந்த அதிமுகவை யாராலும் ஆதிக்கம் செலுத்த முடியாது எனவும் கூறியுள்ளார். தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயுத்த பணிகள் தற்போது முதலே தொடங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளனர். திமுகவை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்ற அதிமுக கூட்டணி (AIADMK Alliance) வியூகம் அமைத்து வருகிறது. அதே நேரத்தில், அதிமுக கூட்டணி சலசலப்புகளும் இருந்து வருகிறது. 2025 ஏப்ரல் 11ஆம் தேதி அதிமுகவுடனான கூட்டணியை பாஜக உறுதி செய்தது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி
இதன் மூலம், வரும் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கூட்டணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே சில விஷயங்கள் பேசும் பொளாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் மத்திய உள்துறை அமித் ஷா கூறியதில் இருந்தே, கூட்டணிக்குள் சலசலப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.
ஆனால், கூட்டணி ஆட்சி கிடையாது என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடாக உள்ளது. ஏனென்றால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற கதையே இதுவரை இல்லை. தமிழகத்தில் இருக்கும் திமுக, அதிமுக என பிரதான கட்சிகளே இதுவரை ஆட்சியில் இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை யாரும் கூட்டணி ஆட்சி அமைத்ததே இல்லை. 2006-11 ஆட்சி காலத்தில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத போதிலும் கூட்டணி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க, மைனாரிட்டி அரசை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி நடத்தினார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு
2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டபோதிலும், அவரால் எதிர்க்கட்சி தலைவராக முடிந்ததே தவிர, ஆட்சியில் பங்கு பெற முடியவில்லை. இப்படியாக வரலாறு இருப்பினும், தற்போது தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான கட்சிகள் ஆட்சி, அதிகாரத்தில் கட்டாயம் பங்கு வேண்டும் என கூறி வருகின்றனர்.
தற்போது கட்சியை தொடங்கிய விஜய் கூட ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கூறியிருக்கிறார். மேலும், திமுக கூட்டணியில் உள்ள விசிகவும், அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிலைபாட்டிலையே உள்ளனர்.
இப்படியான சூழலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜகவும் இதே நிலைபாட்டில் உள்ளது. அதாவது, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் என அமித் ஷா கறாராக கூறி வருகிறார். ஆனால், இதற்கு அதிமுக தரப்பிலும் கடுமையான எதிர்வினைகள் வருகிறது.
பாஜக எடுக்கும் முடிவு என்ன?
அண்மையில் கூட, நாளிதழுக்கு பேட்டி அளித்த அமித் ஷா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் எனவும் கூறினார். மேலும், முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கும் அவர் எடப்பாடி பழனிசாமி பெயரை தவிர்த்தது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு அதிமுக தரப்பில் எந்த வலுவான பதிலும் வராமல் இருக்கிறது.
இந்த சூழலில், கள்ளிக்குறிச்சியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி இதுபற்றி பேசியிருக்கிறார். அதாவது, “எங்கள் கட்சி 50 ஆண்டுகளுக்கும் மேலானது. அது தமிழ்நாட்டை 31 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. அத்தகைய கட்சியை யாராலும் ஆதிக்கம் செலுத்த முடியாது.
2026 தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்” என தெரிவித்துள்ளார். இப்படியாக அதிமுகவின் நிலை இருக்கும் நிலையில், பாஜக என்ன மாதிரியான முடிவை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.