Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கட்சியில் இருந்து என்னை நீக்கியது செல்லாது – பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் திட்டவட்டம்..

PMK MLA ARUL: பாமக எம்.எல்.ஏ அருளை அன்புமணி ராமதாஸ் நீக்கியது செல்லாது என சட்டமன்ற உறுப்பினர் அருள் தெரிவித்துள்ளார். மேலும், அன்புமணி ராமதாஸை, கட்சி நிறுவனர் ராமதாஸ் செயல் தலைவராக தான் நியமித்துள்ளார். செயல் தலைவருக்கு கட்சியில் இருந்து ஒருவரை நீக்குவதற்கு அதிகாரம் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியில் இருந்து என்னை நீக்கியது செல்லாது – பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் திட்டவட்டம்..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Jul 2025 09:13 AM

சென்னை, ஜூலை 3, 2025: பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து தன்னை, அன்புமணி ராமதாஸ் நீக்கியது செல்லாது என சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள் தெரிவித்துள்ளார். தன்னை நீக்கும் அதிகாரம் கட்சி நிறுவனர் ராமதாஸிற்கு மட்டுமே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கக்கூடிய உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அக்கட்சியில் இருக்கக்கூடிய தந்தை மகன் மோதலும் வலுவடைந்து வருகிறது. இதில் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு கட்சியை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தைலாபுரத்தில் கட்சி நிறுவனர் ராமதாஸ் நடத்தக்கூடிய ஆலோசனைக் கூட்டங்களில் அன்புமணி ராமதாஸ் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொள்வதில்லை. ராமதாஸின் ஆதரவாளர்களை வைத்து மட்டுமே இந்த கூட்டங்கள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கட்சியை எப்படி வலுப்படுத்துவது, 2026 சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது, வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது.

கட்சி தலைவராக அன்புமணி ராமதாஸின் செயல்பாடுகள்:

அதே போல கட்சி தலைவர் ராமதாஸ் தலைமையில் பொதுக்கூட்டம் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக கட்சி நிறுவனர் ராமதாஸின் ஆதரவாளரான எம்.எல்.ஏ அருளுக்கு இணை பொதுச் செயலாளர் பதவி வழங்கிய ராமதாஸ் உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அதனை தொடர்ந்து அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டார்.

இந்த செயல்பாட்டிற்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர் அருள், அன்புமணி ராமதாஸ் பிறர் பேச்சை கேட்காமல் தைலாபுரத்திற்கு வந்து ராமதாஸ் சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இருவரும் இணைந்து கட்சியை நடத்த வேண்டும் எனவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

எம்.எல்.ஏ அருளை கட்சியை விட்டு நீக்கிய அன்புமணி ராமதாஸ்:

பின்னர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களால் தனக்கும் பிறருக்கும் பிறர் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் எம்.எல்.ஏ அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இது தொடர்பாக பேசிய சட்டமன்ற உறுப்பினர் அருள், தன்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கு அன்புமணி ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்றும் கட்சி நிறுவனர் ராமதாஸுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அன்புமணி ராமதாஸை, கட்சி நிறுவனர் ராமதாஸ் செயல் தலைவராக தான் நியமித்துள்ளார். செயல் தலைவருக்கு கட்சியில் இருந்து ஒருவரை நீக்குவதற்கு அதிகாரம் கிடையாது அது கட்சி தலைவருக்கு மட்டுமே உள்ளது இதனால் இந்த நீக்கம் செல்லாது என குறிப்பிட்டுள்ளார்.