கூட்டணி ஆட்சி கதவை அடைத்த ஸ்டாலின்…ரகசியம் வைத்துள்ள செல்வப்பெருந்தகை..காங்கிரஸுக்கு இருக்கும் 2 சாய்ஸ்!
Congress Coalition Government: திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கே கேட்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் கூட்டணி ஆட்சிக்கான கதவை அடைத்துவிட்டநிலையில், காங்கிரஸ் தலைமை எந்த மாதிரியான முடிவெடுக்கும் என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது.

கூட்டணி ஆட்சி விவகாரத்தில் காங்கிரஸ் என்ன முடிவெடுக்கும்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ளது. இந்த தேர்தலில் வெற்றியை எதிர்பார்த்து அரசியல் கட்சிகள் படு வேகமாக தேர்தல் களம் ஆடி வருகின்றன. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் கிட்டத்தட்ட கூட்டணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் அந்த கூட்டணியிலேயே தொடர்வதாக கூறப்பட்டு வந்த நிலையில், இதில், காங்கிரஸ் கட்சி மட்டும் கூட்டணியில் இருந்து வெளியேறி விடலாமா என்ற எண்ணத்தில் இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. ஏனென்றால், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்டு வரக்கூடிய நிலையில், காங்கிரஸ் கட்சி ஒரு படி மேலே சென்று கூடுதல் தொகுதிகள் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது. இது திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்துள்ளது.
செல்வப்பெருந்தகையிடம் தலைமை கூறிய ரகசியம்
இந்த விவகாரம் தொடர்பாக திமுக- காங்கிரஸ் ஆகிய தலைமை பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது. ஆனால், பெரிதளவில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. தொகுதி பங்கீடு குறித்து குழு அமைத்த பின்னர் பேசலாம் என்று திமுக தலைமை கூறியிருந்தது. இந்த குழுவை உடனடியாக அமைக்குமாறு காங்கிரஸ் தலைமை வலியுறுத்தி இருந்தது. ஆனால், சுமார் 70 நாட்களைக் கடந்த பின்னரும் தொகுதி பங்கீடு குழு அமைக்கப்படவில்லை. இதனால், காங்கிரஸ் தலைமை கடும் அதிருப்தி அடைந்தது. இதனிடையே, காங்கிரஸ் தலைமை என்னிடம் சில கருத்துக்களை தெரிவித்துள்ளது. அதனை ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து தெரிவிக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: ‘ஆட்சியில் பங்கு’.. அதிமுக கூட்டணியின் நிலைப்பாடு என்ன? இபிஎஸ் பரபர பேச்சு!!
கூட்டணி கதவை அடைத்த ஸ்டாலின்
இந்த நிலையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்து வராது எனவும், அதனை மக்கள் விரும்ப மாட்டார்கள் எனவும், இது காங்கிரஸ் கட்சிக்கு தெரியும் எனவும் கூறியிருந்தார். மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலை திமுகவும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து சந்திக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். இவரது பேச்சில் திமுக கூட்டணியில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரிகிறது. இதனால், கூடுதல் தொகுதிகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிலைப்பாட்டில் தீர்க்கமாக இருந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரிய பின்னடைவை கொடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு இரு வழிகளே உள்ளன
இதனால், காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் வழங்கப்படும் தொகுதிகளை பெற்றுக்கொண்டு தொடர வேண்டும் அல்லது அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி தமிழக வெற்றி கழக கூட்டணியில் இணைய வேண்டும் என்ற இரு வழிகளே உள்ளன. இதில், எந்த முடிவை காங்கிரஸ் கட்சி தலைமை எடுக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.
மேலும் படிக்க: நாளை சேலத்தில் விஜய் பிரசாரம்.. இவர்களுக்கு மட்டுமே அனுமதி.. தவெக வெளியிட்ட அறிவிப்பு!!